இந்தப் பேட்டி 14-4-83 அன்று மதியத்திற்குமேல் உதகமண்டலத்தில் நிகழ்த்தப்பட்டது. இடம் செயின்ட் மேரீஸ் ஹில். கோடை என்பதால் கண்ணாடி ஜன்னல்கள் திறந்து விடப்பட்டிருக்கின்றன. தூரத்துத் தோட்டங்களில் மருந்து தெளிக்கும் யந்திரங்களின் தொடர்ச்சியான ரீங்காரம் கேட்கிறது. அறைக்குள் தாமோதர் தீட்டிய தைல வண்ண ஓவியம். அதை நோக்கியபடி ஆத்மாநாம் ஒரு நீல நிற ஒயர் நாடாக்கள் பின்னிய நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். பேட்டியின்போது Charms சிகரெட்டுகளைப் பிடித்தவண்ணம் இருக்கிறார். ஸ்டீல் டீப்பாயின் மீதிருந்த Nippo batteries-ன்டீ ட்ரேயை சாம்பல் கிண்ணமாகப் பயன்படுத்துகிறார். காலர் வைத்த காக்கியுமல்லாத மிலிட்டரி பச்சையுமில்லாத ஒரு நிறத்தில் ஜிப்பா ஷர்ட் அணிந்திருக்கிறார். பதில்களை இடைவிட்டு நிறுத்திப் பேசுகிறார். சில நேரங்களில் தடையற்ற பிரவாகமாகவும் பதில்கள் வெளிப்படுகின்றன. இந்தச் சமயத்தில் ஆத்மாநாம் படித்துக்கொண்டிருந்த புத்தகங்கள், Stalin : an Impartial Study of the life and works of JosephStalin (Stephen Graham), Octavio Paz-ன் கவிதைகள், Gunter Grass-ன் கவிதைகள், நவீன ஐரோப்பியக் கவிஞர் வரிசையில் வெளிவந்த Tadeuz Rosewicz. பேட்டி பதிவு செய்யப்பட்டுப் பிரசுர நிலையை அடைந்திருக்கிறது. கேள்விகள் மட்டுமே முன்தீர்மானத்துடன் உருவாக்கப்பட்டு இருந்தன. மேலும் அக்கேள்விகளும் ஆத்மாநாமின் பதில்களால் ஈர்க்கப்பட்டுவேறு வடிவங்களை அடைந்திருக்கின்றன. 24-4-83 அன்று இரவு கோவை, அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிபரப்பப்பட்ட இந்தப் பேட்டிக்கும் தொடர்பு ஏதுமில்லை. பிரம்மராஜன்: தமிழ்ப் புதுக்கவிதைல 20 வருஷம் பழக்கம் இருக்குன்னுகணக்கு வெச்சுக்கலாம். எழுத்து பத்திரிகைல இந்தப் புதுக்கவிதை ஒரு ஆரம்ப நிலைல இருந்தது. கொஞ்சம் கழிஞ்சு கசடதபற பத்திரி்கை காலத்தில எழுதப்பட்ட கவிதைகள் வளர்ச்சியாயிருந்தது. பின்னால ‘ழ’ பத்திரிகையில வந்த கவிதைகள், இப்ப ‘எழுத்து’ கவிதைகள், ‘கசடதபற’ கவிதைகள் என்கிற ஒரு காலப்பிரிவாக வைத்துக்கொள்ளலாம். இவை வளர்ச்சி ரீதியா என்னென்ன நிலைகளில் இருந்தன? இயல்பு ரீதியா என்ன வித்தியாசங்கள் ஏற்பட்டிருக்கு? ஆத்மாநாம்: தமிழின் புதுக்கவிதைகள் பாரதியாரிடமிருந்து ஆரம்பமாகின்றன என்று கணக்கு பார்த்தா சுமார் 60 ஆண்டுகளுக்குத் தமிழ்ல புதுக்கவிதைகள் இருக்குன்னு சொல்ல முடியும். பாரதியாருக்கு அடுத்து வரக்கூடிய கவிஞர்கள்னு ந. பிச்சமூர்த்தி, கு. ப. ரா, புதுமைப்பித்தன் போன்றவர்களைச் சொல்ல முடியும். ‘எழுத்து’ பிரசுரமான புதுக்குரல்களின் மூலம் தெரியவந்த கவிஞர்களின் பெரும்பான்மையான கவிதைகள் மேற்கத்திய தத்துவத்தையோ அல்லது கிழக்கத்திய |