பக்கம் எண் :

24 

இல்லாமல் எந்த ஒரு கலைஞனும் இருந்ததில்லை. நல்வினைக்கும் தீவினைக்கும் அப்பால் தானிருப்பதாக இருபதாம் நூற்றாண்டுக் கலைஞன் உணர்கிறான். நல்வினைக்கும் தீவினைக்கும் இடையிலான வேறுபாடுகளைக் கண்டுபிடிப்பதென்பதே ஒரு நேர்மையற்ற செயல்பாடாகப் பார்க்கிறார் ஆத்மாநாம். இந்தத் தொகுப்பின் தீவிர நாடகவியல் தன்மைகள் மிகுந்த ஒரு கவிதையாகப் போய்யா போ இருக்கிறது.

“நான்”களைக் களைந்து செல்கிற, அப்பாலில் வாழும் ஒரு கலைஞனாக மாத்திரமே ஆத்மாநாம் பார்க்கப்படக் கூடாது. நாளை நமதே என்கிற சற்றே செண்டிமென்டலான தலைப்பு கொண்ட கவிதையையும் இன்னும் பல மனித நேயமிகுந்த கவிதைகளையும் எடுத்துக்காட்டலாம். மலர்களைப் பற்றி மாத்திரம் பாடாமல் உருளைக் கிழங்கைப் பற்றிப் பாட வேண்டுமென்று சொன்னபோது பிரெஞ்சுக் கவிஞர் ரைம்போ (Arthur Rimbaud) இப்படி எழுதினார்:

Above all, rhyme a version
All about potato blight

திருஷ்டிப் பூசணிக்காய்களைப் பற்றியும், சோளக் கொல்லைப் பொம்மைகளைப் பற்றியும் நுணுக்கமான கவிதைகளை எழுதியவர் ஆத்மாநாம். ஆயினும் அவரதுமனித நேயத்தைத் தனியாகவும் கும்பல் வெறுப்பைத் தனியாகவும் வைத்து நாம் ஆராய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு மஹா ஜனம் என்ற கவிதை. டெக்னாலஜியைப் பயன்படுத்தி அதைக் கவிதையின் பொருளாகவே ஆக்கி (டேப் ரெக்கார்டர்)யிருந்த போதிலும் டெக்னாலஜியால் அவர் ஈர்க்கப்படவில்லை என்று தெரிகிறது. தனி மனிதன் மீதான நகரத்தின் ஆக்கிரமிப்பை முறியடிப்பதற்கு அவர் தரும் ஒரே அற்புத உபாயம் முத்தம். நிஜம் போன்ற கவிதைகள் கணிதவியல் சமன்பாடுகள் அளவுக்குத் தர்க்கம் மிகுந்தவையாக இருப்பதால் இன்னும் சில தசாப்தங்களுக்கு அவை பழையதாகும் அபாயத்திலில்லை. அவரே கூறியிருப்பது போல

உதிரும் மலரின்
கணிதத்தை
என்றாவது
நீங்கள் யோசித்திருந்தால்
மட்டும்
இது புரியும்
இல்லை
என்னோடு எப்போதும்
உறவாடும்
பாறையைக் கேளுங்கள்.

(எங்கோ)

அதை/அவற்றை உணர்வதற்கான சம அலைவுகள் நம்மிடம் இருக்கும் பட்சத்தில்சரி.

10. 7. 2002

தர்மபுரி

பிரம்மராஜன்