சந்தித்த பின்னும் அவர் கவிதைகள் தொடரத்தான் செய்கின்றன. இந்த “இன்மை”யை அவர் இருத்தலியலின் வழியாகச் சென்றடையவில்லை, அவர் எழுதிய காலத்தில் மிகவும் பிரபலமான மோஸ்தராக இருத்தலியல் இருந்தபோதிலும். இந்தப் பயணத்தினூடாகப் பல “நான்”களின் முகமூடிகளைக் களைந்து செல்கிறார்: என்னைக் களைந்தேன் என் உடல் இருந்தது என் உடலைக் களைந்தேன் நான் இருந்தது நானைக் களைந்தேன் வெற்றிடத்துச் சூனிய வெளி இருந்தது சூனிய வெளியைக் களைந்தேன் ஒன்றுமே இல்லை (களைதல்) டி. எஸ் எலியட்டின் வரிகளை இங்கு மேற்காட்டுவது பொருந்தும்: தன்னை வேறு யாரோ ஒருவரென்று பாசாங்கு செய்யும் சுயத்திலிருந்து நான் விடுதலையடைந்திருக்கிறேன். மேலும் எவர் ஒருவராகவும் நான் ஆகாதபோது நான் வாழத் தொடங்குகிறேன் யதார்த்தம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்றும், நிறுத்தலேயின்றி உருமாற்றிக்கொண்டும், துன்பப்பட்டுக்கொண்டும், பிற உலகங்களின் மீது தனது பதிவுகளைவிட்டுச் சென்றபடியுமிருப்பது மானுட பிரக்ஞை மாத்திரமே என்று நவீன ஜெர்மானியக் கவிஞரான காட்ஃபிரைட் பென் (Gottfried Ben) குறிப்பிட்டார். இதுவும் ஒரு வித புராதன உள்ளுணர்வுக்குத் திரும்பும் நிலைதான் என்று புரிந்து கொள்ளலாம். யதார்த்தத்தினை மறுத்து உள்வயமான யாத்திரையை ஒரு தனிநபர் மேற்கொள்வதற்குக் காரணம் புற உலகிலிருந்துஅவர் அந்நியமாவதுதான். (கூடுதல் தகவல்களுக்கு எரிக் ஃபிராம் எழுதிய நூல்கள் உதவும். ) “யதார்த்தம் முழுமுற்றாய்ப் பரிவர்த்தனை செய்ய முடியாதது. அது எதையும் ஒத்திருப்பதில்லை. எதையும் குறிப்பதில்லை. எதுவுமே அதை பிரதிநிதித்துவப்படுத்தவோ அல்லது விளக்கமளிக்கவோ செய்ய முடியாது. அதற்குக் கால அளவோ அல்லது இடமோ அல்லது கற்பனை செய்ய முடியக்கூடிய ஒழுங்கோ அன்றி பிரபஞ்சமோ இல்லை... ” என்று பால் வெலேரி சொன்னதையும் இங்கு நினைவு கூர வேண்டும். இந்த உலகத்தை முழுமுற்றான நம்பிக்கையின்மையுடன் நோக்குகிற ஒருவனை எந்த ஒரு தார்மீக/ஒழுக்கவியல் அதிகாரத்துவமும் பிணைக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. ஒழுக்கவியல் முழுமைகளுக்கு வரையறுக்கப்பட்ட ஒரு நடப்பியலில் அர்த்தமே இல்லை. நடப்பியல் உலகத்தின் ஒழுக்கவியல் மீது வெறுப்போ நிராகரிப்போ |