பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்97

காட்சி

முதலில்
நீதான் என்னைக் கண்டுகொண்டாய்
எனக்குத் தெரியாது
மனிதர்களைப் பார்த்தவண்ணம்
முன்னே வந்துகொண்டிருந்தேன்
உயிருடைய ஒரு முகத்துடன்
பளிச்சிட்டுத் திரும்பினாய்
பின்னர் நடந்தவைக்கெல்லாம்
நான் பொறுப்பல்ல
எந்த ஒரு கணம்
என் பார்வை உன் மேல் இல்லையோ
அந்த ஒரு கணம்
முழுமையாக என்னைப் பார்ப்பாய்
அதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
மாமன் ஒருவன்
உன்னை இடம்பெயர்க்கக்
காட்சிகள் மாற மாற
நானும் நீயும்
ஒரு நாடகத்தை முடிக்கிறோம்