அப்பொழுது கபிலரின் ஆலோசனைப்படி அம்மலையிலே விளைந்த நெல்லைக்கொண்டே உயிர் வாழ்ந்தான். மூவேந்தர்களுடனும் எதிர்த்துப் போர்செய்து அவர்களை விரட்டியடித்தான். (பா. 78) பிட்டன் என்பவன் சேர மன்னனுடைய படைத் தலைவன்; சிறந்த கொடைவள்ளல் (பா. 143) யவனர்களுடைய கப்பல்கள், சேரமன்னர்க்கு உரிமையான சுள்ளியாற்றின் வழியே பொன்னைக்கொண்டு வரும்; திரும்பும்போது மிளகை ஏற்றிக் கொண்டு திரும்பும்; இத்தகைய வளம் பொருந்தியது முசிறி என்னும் நகரம். (பா. 149) இந்த முசிறி, பாண்டியனது துறைமுகப் பட்டினம் என்று குறிப்பிடப் பட்டிருக்கின்றது. (பா. 57) மன்னர் குலத்தை வேரறுக்க முயன்றவன் பரசுராமன்; அவனுடைய படை, மழுப்படை. அவன் செல்லூர் என்ற இடத்திலே மிகவும் முயன்று ஒரு வேள்வியைச் செய்து முடித்தான். (பா. 220) ஆதி மந்தியாரும், அவள் கணவன் ஆட்டனத்தியும் காவிரியின் சங்க முகத்துறையிலே நீராடினர். அப்பொழுது ஆட்டனத்தி கடலிலே மூழ்கிவிட்டான். ஆதிமந்தியார் பலவிடங்களிலும் அவனைத் தேடி அலைந்தாள். அவளும் கடலிலே மூழ்கத்துணிந்தாள். இவ்வரலாறு பல பாடல்களிலே காணப்படுகின்றது. இன்னும் நன்னன்வேண்மான், பேகன், அதிகன், ஆய்அண்டிரன் போன்ற பல வள்ளல்களைப் பற்றியும், வீரர்களைப் பற்றியும் குறிப்பிடும் பாடல்கள் பலவுண்டு. |