பக்கம் எண் :

106எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

மதுரை, கொற்கை; வஞ்சிமாநகர், தொண்டி; உறந்தை, காவிரிப்பூம்பட்டினம்; கருவூர், முசிறி, திருச்சிராப்பள்ளி, குடந்தை, பொறையாறு, அள்ளூர், முள்ளூர், ஆமூர், சிறுகுடி, பரங்குன்றம், அலைவாய், தனுக்கோடி முதலிய ஊர்களை இந்நூல் பாடல்களிலே காணலாம்.

பொதியமலை, வேங்கடமலை, சிறுமலை, திருச்சிராப்பள்ளிமலை, கொல்லிமலை போன்ற பல மலைகளைக் குறிக்கும் பாடல்களும் இந்நூலில் உண்டு.

காவிரி, பெண்ணை, வையை, பொருநை, முள்ளி, ஆன்பொருநை போன்ற பல ஆறுகளின் பெயர்களும் அகநானூற்றுப் பாடல்களிலே காணப்படுகின்றன.

சூரபன்மனைக் கொன்ற - வேலாயுதத்தையுடைய - முருகன் வீற்றிருக்கின்ற திருப்பரங்குன்றம்; நல்லந்துவன் என்னும் புலவரால் பாடப்பட்ட “திருப்பரங்குன்றம்’’ என்று பரங்குன்றைப் பாராட்டுகிறது ஒரு பாடல். (பா. 59)

இவை போன்ற இன்னும் பல வரலாற்றுக் குறிப்புக்களை இந்த அகநானூற்றுப் பாடல்களின் மூலம் அறியலாம்.

பழக்க வழக்கங்கள்

சங்க காலத் தமிழ் மக்களிடையிலேயிருந்த பல பழக்க வழக்கங்களையும் இந்நூற் பாடல்களிலே காணலாம்.

யாழை இசைக்கத் தொடங்கும்போது, முதலிலே கடவுளை வாழ்த்துவர்; பிறகுதான் முறையாக யாழிசைப்பர். (பா. 14)

புலிப்பல்லைப் பொன்னோடு சேர்த்துக் கட்டிய தாலியை அணிவார்கள். (பா. 7)