பார்ப்பனர்களிலே யாகஞ் செய்யாத பார்ப்பனர்கள் என்று ஒரு வகுப்பினர் இருந்தனர். சங்குகளை அறுத்து வளையல்கள் செய்வது அவர்கள் தொழில். (பா. 24) வழி நடப்போர் கட்டுச் சோறு கட்டி எடுத்துச் செல்வர்: அந்தக் கட்டுச்சோற்று மூட்டையைக் கழியிலே கோத்துத் தோளிலே வைத்துக்கொண்டு நடப்பார்கள். இதனால் அதற்குத் ‘‘தோட்பதன்’’ என்று பெயர். பதன்-உணவு. (பா. 79) இம்மையிலே நன்மை செய்வதனால் தீமையில்லை; நன்மைதான் கிடைக்கும்; என்பது ஒரு பழமொழி (பா. 101) உறந்தையிலே, காவிரிக் கரையிலே பங்குனி மாதத்திலே விழா நடைபெறும். (பா. 137) கார்த்திகையிலே, உரோகிணியும் சந்திரனும் சேரும் நடு இரவிலே வீதிகள் தோறும் விளக்கேற்றி வைப்பார்கள்; மலர் மாலைகளைக் கட்டித் தொங்கவிடுவார்கள்; பலரும் கூடித் திருவிழாக் கொண்டாடுவார்கள் (இது கார்த்திகை விழா). (பா. 141) பெண்கள் மாலைக்காலத்திலே பிறையை வணங்குவார்கள். (பா. 239) வேப்பமரத்திலே தெய்வம் குடிகொண்டிருப்பதாக நம்பினர். (பா. 309) நள்ளிரவே பேய்கள் நடமாடும் நேரம் என்று நம்பினர். (பா. 311) போர்க்களத்திலே மாண்ட வீரர்களுக்கு நடுகல் நாட்டுவார்கள். அக்கல்லிலே அவர்களுடைய பெயரையும், பெருமையையும் எழுதி வைப்பார்கள். (பா. 67) |