பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்133

மக்கள் இயற்கையென்றுதான் கொள்ளவேண்டும். மிகவும் நேர்மையாக நடந்துகொண்ட பண்டைக்கால மக்களிடமும் இக்குணம் இருந்ததாகத்தான் தெரிகின்றது.

‘‘உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம்
கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறாகுதல்
பண்டும்இவ் வுலகத்து இயற்கை; அஃது இன்றும்
புதுவது அன்றே.                                                (பா. 22)

‘‘உண்பதற்காக வாங்கும் கடனைப் பெற, முறையோடு கூறி இரக்கும்போது காணப்படும் முகமும், தாம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது காணப்படும் முகமும் வேறு வேறாகக் காணப்படுதல் பண்டைக் காலத்திலும் இயல்பாகும். இந்த இயல்பு இன்றும் உண்டு. இது புதியதன்று; பழமை தொட்டுத் தொடர்ந்தே வருகின்றது’’.

இதனால் கடன் வாங்குவோர் நிலையைக் கண்டறியலாம்.

கற்புடை மகளிர்

பெண்களின் கற்பைப் பற்றிக் கலித்தொகைப் பாடல்கள் பலவற்றிலே காணலாம். சங்க இலக்கியங்களிலே பெண்களுக்கு மட்டுந்தான் கற்பு வலியுறுத்தப்படுகின்றது. பெண்கள் மட்டுந்தான்-ஆடவர்களை மணம் புரிந்துகொண்ட மனைவிமார்கள் மட்டுந்தான்-கட்டுப்பட்டு வாழ வேண்டும்; கற்புடையவர்களாய் வாழவேண்டும்; என்று கருதினர். ஆண்களுக்கு எத்தகைய கட்டுப்பாடும் இல்லை. அவர்கள் மனம் போனபடி திரியலாம். ஆண்கள் பல பெண்களை மணந்தனர்; பரத்தையர்களுடனும் கூடிக் களித்தனர். இது இக்காலத்திற்கு ஏலாத ஒழுக்கம்.

‘‘வடமீன்போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள்.

அருந்ததியைப்போல எல்லோரும் தொழுது போற்றும்படி விளங்குகின்ற கற்பினை யுடையவள்’’. (பா. 2)