பக்கம் எண் :

132எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

எவ்வளவுதான் பிறர் அறியாமல் மறைத்தாலும் அவைகள் மறைந்துவிடா. அக்கொடுமைகளை அவர்கள் நினைக்கும் போது அவர்கள் மனம் குழம்பும். அவர்களுடைய கொடுமையை மெய்ப்பிக்க அவர்களுடைய நெஞ்சத்தைக் காட்டிலும் நெருங்கிய சாட்சி வேறு ஒன்றுமேயில்லை’’.

பிறர் அறியாமல் ஒருவர் குற்றஞ் செய்யலாம். ஆனால் அவர் மனம் அவர் செய்த குற்றத்தை மறக்காது. ஆதலால் அவருக்கு மனவேதனை தோன்றுவது இயற்கை.

கொடுக்கல் வாங்கல்

கொடுக்கல் வாங்கல் என்பது உலக வழக்கு. கடன் கொடுப்பது கொடுக்கல்; அதைத் திருப்பி வாங்குதல் வாங்கல். பணத்தை வட்டிக்குக் கொடுத்து வாங்கும் முறை ஏற்பட்ட பிறகுதான் கொடுக்கல் வாங்கல் என்ற இந்தச் சொற்றொடர் பிறந்திருக்கக் கூடும்.

பண்டைக் காலத்திலே பணத்தை வட்டிக்குக் கொடுத்து வாங்கும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. பொருள் வேண்டியவர்கள், தமக்கு வேண்டிய பொருளை, உள்ளவர்களிடம் கடனாக வாங்கிக் கொள்ளுவார்கள்; பிறகு கொடுத்து விடுவார்கள். இப்படி வாங்கும் கடனுக்குத் தனிசு என்று பெயர்.

கடன் வாங்கும்போது முகமலர்ச்சியுடன் வாங்குவார்கள். அக் கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது வாங்கும் போதிருந்த முகமலர்ச்சியை அவர்களிடம் காண முடியாது. இதை இன்றும் கடன் வாங்குவோரிடம் காணலாம். கடன் கொடுத்தவர்களுக்கும் கடன் வாங்கினவர்களுக்கும் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதையும் காண்கின்றோம். வாங்கும்போது மகிழச்சியடைதலும், கொடுக்கும்போது வருத்தமடைதலும்