14 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
வாழ முயலுதல்; தன்னை மணக்க விரும்பாத பெண்ணைப் பலவந்தமாக மணக்க முயற்சித்தல்; இவைபோன்ற பொருத்தமற்ற வாழ்க்கை பெருந்திணையாகும். இதுவும் கூடா வொழுக்கத்தையே சேரும். பண்டைத் தமிழர்களிடம் இத்தகைய கூடா ஒழுக்கங்களும் இருந்தன என்பதையே இவைகள் காட்டுகின்றன. சில உண்மைகள் எட்டுத்தொகை நூல்களிலிருந்து நமக்கு வியப்பைத் தரும் சில உண்மைகள் தெரிகின்றன. சேர நாட்டிலே ஒரு பகுதி இன்று கேரளம் என்ற தனி நாடாக விளங்குகிறது. சேர நாட்டிலே வாழ்ந்த தமிழ் மக்களிலே பலர் இன்று கேரளீயர், அல்லது மலையாளிகள் என்ற தனித் தேசீய இனமாக வாழுகின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மலையாளம் என்ற தனி மொழியோ, மலையாளிகள் என்ற தனித் தேசீய இனமோ தனியாக இருந்ததில்லை. இன்றுள்ள கேரளநாடு அன்று மலைநாடு, சேரநாடு என்ற பெயர்களுடன் விளங்கியிருந்தது. இவ்வுண்மையைப் பதிற்றுப்பத்தின் மூலமும், ஏனைய எட்டுத்தொகை நூல்களின் மூலமும், பத்துப்பாட்டின் மூலமும் காணலம். இன்று திருப்பதி, திருவேங்கடம் என்று வழங்கப்படும் வேங்கடம் தமிழகத்தின் வடவெல்லை. வேங்கடத்திற்கு அப்பால் உள்ள வடபகுதியை வேற்றுமொழி வழங்கும் நாடு என்று எட்டுத்தொகை நூல்கள் கூறுகின்றன; அங்கு வழங்கிய மொழி வடுகு என்றும், அங்கு வாழ்ந்த மக்கள் வடுகர் என்றும் கூறுகின்றன. அந்த வடுகர்களுக்கும் தமிழர்களுக்கும் போர்கள் நடைபெற்றிருக்கின்றன. |