தமிழர்கள் பொருள் தேடுவதற்காக வேங்கடத்தைத் தாண்டி வடுகர் நாட்டின் வழியாகச் செல்வார்கள். அவர்கள் செல்லும் வழி நீர்வளமற்ற பாலைவனம்; வறண்ட காட்டுவழி. அவர்களுக்கு வடுகர்களால் பல ஆபத்துக்கள் உண்டாகும். இச் செய்தி அகநானூற்றில் காணப்படுகின்றது. வேங்கடம் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தது; தொண்டையர்-திரையர்-என்ற தொண்டை மண்டல வேந்தர்களே வேங்கடத்தை ஆண்டு வந்தனர். வேங்கடம் நீர்வளம் நிறைந்தது; பல விளைவுப் பொருள்களையுடையது; நல்ல செல்வங்களைச் சுரப்பது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. வேங்கடமலைக்குத் திருவேங்கடம் என்ற பெயரோ, திருப்பதி என்ற பெயரோ காணப்படவில்லை. வேங்கடம் என்றுதான் காணப்படுகின்றது. அகநானூற்றிலும் புறநானூற்றிலும் வேங்கடத்தைப் பற்றிய பாடல்கள் காணப்படுகின்றன. ஒரு பாடலில் மட்டும் ‘‘விழவுடை விழுச்சீர் வேங்கடம்’’ (அகம் 61) என்ற தொடர் காணப்படுகின்றது. விழாவையுடைய மிகச் சிறந்த வேங்கடம் என்பதே இதன் பொருள். சங்க நூல்களிலே, கொல்லி மலையைப்பற்றிய பாடல்களிலே, கொல்லிப்பாவை என்னும் தெய்வம் குறிப்பிடப் பட்டுள்ளது. அழகர் மலை-அதாவது திருமாலிருஞ்சோலை மலையைப்பற்றிப் பாடும்போது திருமாலைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். பரங்குன்றத்தைப் பாடும்போது முருகனைப்பற்றிக் கூறியுள்ளனர். நன்னனுடைய நவிர மலையைப்பற்றிப் பாடும்போது ‘‘காரயுண்டிக் கடவுள்’’ குறிப்பிடப்பட்டுள்ளார். |