பக்கம் எண் :

148எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

இந்நூலின் இரண்டாவது பாடலை இயற்றியவர் கீரந்தையார். இது திருமால் வாழ்த்து.

மூன்று, நான்கு, ஐந்து ஆகிய மூன்று பாடல்களும் கடுவன் இளவெயினனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டவை. மூன்றும், நான்கும் திருமாலைப் பற்றியவை; ஐந்து முருகனைப் பற்றியது.

ஆறு, எட்டு, பதினொன்று, இருபது ஆகிய நான்கு பாடல்களும் ஆசிரியர் நல்லந்துவனார் என்பவரால் பாடப்பட்டவை. எட்டாவது பாடல் முருகனைப்பற்றியது. ஏனைய மூன்றும் வையையாற்றைப் பாடியன. இவர் வரலாற்றைக் கலித்தொகைக் குறிப்பிலே காணலாம்.

ஏழாவது பாட்டு மையோடக்கோவனார் என்னும் புலவரால் பாடப்பட்டது இது வையையைப் பற்றியது.

ஒன்பது, பதினெட்டு ஆகிய இரண்டு பாடல்களும் குன்றம்பூதனார் என்பவரால் பாடப்பட்டவை. இவையிரண்டும் முருகனைப் பற்றியவை.

பத்தாவது பாடல் கரும்பிள்ளை நப்பூதனார் என்பவரால் பாடப்பட்டது. இது வையையைப் பற்றியது.

பன்னிரண்டாவது பாடல் நல்வழுதியார் என்பவர் பாட்டு; இதுவும் வையையைப் பற்றியது.

பதினான்காவது பாடலை இயற்றியவர் கேசவனார் என்பவர்; இது முருகனைப் பற்றியது.

பதினைந்தாம் பாடலின் ஆசிரியர் இளம்பெருவழுதியார் இது திருமாலைப் பற்றியது.