பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்147

பரிபாடல்கள் அனைத்தும் பண்ணுடன் கூடியவை. இசைப் பாடல்கள், இயற்றமிழும் இசைத்தமிழும் கலந்த பாடல்கள். பாலையாழ், நோதிறம், காந்தாரம் என்ற பண்கள் பரிபாடல்களிலே காணப்படுகின்றன. இப்பண்களை அறிந்து பாடுவோர் இக் காலத்தில் இல்லை.

கடைச் சங்க காலத்திலே எழுபது பரிபாடல்கள் இருந்தன. திருமாலைப்பற்றி எட்டு; முருகனைப்பற்றி முப்பத்தொன்று; காடுகிழாளைப்பற்றி ஒன்று; வையையைப் பற்றி இருபத்தாறு; மதுரையைப்பற்றி நான்கு; ஆக எழுபது பாடல்கள்.

பரிபாடலிலே திருமாலைப் பற்றியும், முருகனைப் பற்றியும், காடுகிழாளைப் பற்றியும் தனித்தனியே வணக்கப் பாடல்கள் பாடியிருக்கின்றனர். ஆனால் சிவபெருமானைப் பற்றிய வணக்கப் பாடல்கள் தனியாக இல்லை. ஆயினும் பல பாடல்களிலே சிவபெருமானைப் பற்றிய வரலாறுகள் காணப்படுகின்றன.

ஆசிரியர்கள்

இப்பொழுதுள்ள பரிபாடலில் இருபத்து நான்கு பாடல்களே காணப்படுகின்றன; சிதைந்து போன சில பாடற் பகுதிகளும் உண்டு. இந்த இருபத்து நான்கு பாடல்களில் திருமாலைப்பற்றியவை ஏழு; முருகனைப் பற்றியவை எட்டு; வையையாற்றைப் பற்றியவை ஒன்பது; சிதைந்த பாடற் பகுதிகளிலே மதுரையைப் பற்றிக் கூறும் பகுதிகள் குறிப்பிடத் தக்கவை.

இவற்றுள் 1, 22, 23, 24 ஆகிய நான்கு பாடல்களின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சிதைந்த பாடல்களைச் செய்தவர்களின் பெயரும் தெரியவில்லை. ஏனைய இருபது பாடல்களையும் பதின்மூன்று புலவர்கள் பாடியிருக்கின்றனர்.