146 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
‘‘தெய்வ வாழ்த்து உள்பட காமப்பொருள் குறித்து உலகியலைப் பற்றிக் கூறுவது பரிபாடல்’’ இது நச்சினார்க்கினியர் நவின்றது. ‘‘தெய்வமும் காமமும் பொருளாகக் கொண்டு வருவது பரிபாடல்’’ இது யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் மொழி. இவைகளால் பரிபாடற் பாட்டுக்கள் புறப்பொருட் செய்திகளையும் புகல்கின்றன; அகப்பொருட் செய்திகளையும்அறிவிக்கின்றன; என்று அறியலாம். நாலாயிரப் பிரபந்தம், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், அருட்பா முதலியவை சங்க காலத்திற்குப் பின்னே தோன்றியவை. கடவுளிடம் அன்பு செலுத்தத் தூண்டும் கவிதைகள் இவைகள். சங்க காலத்திலே பரிபாடல்களே தெய்வபக்தியைத் தூண்டும் தீந்தமிழ்ச் செய்யுட்களாக நிலவி வந்தன. கடவுளர் பெயர்கள், அவர்களுடைய திருவிளையாடல்கள் பற்றியே பிற்காலத்துப் பக்திப் பாடல்களில் காணப்படுகின்றன; இடையிடையே சில அறவுரைகளும், உண்டு; மத வெறுப்புகளும் காணப்படுகின்றன. ஒரு சில ஆசிரியர்களே தங்கள் காலத்திலிருந்த மக்கள் பழக்க வழக்கங்களையும், நாட்டின் நிலைமையையும் இணைத்துப் பாடியிருக்கின்றனர். சங்க காலத்துப் பக்திப் பாடல்களாகிய பரிபாடல்களிலே பழைய நாகரிகங்களைப் பார்க்கலாம். அக்காலத்து மக்களின் பழக்க வழக்கங்களைக் காணலாம். தமிழர்களின் பண்பாடுகளை அறியலாம். இவைகள் பிற்காலப் பக்திப் பாடல்களுக்கும், முற்காலப் பக்திப் பாடல்களுக்கும் உள்ள வேற்றுமை. |