பக்கம் எண் :

  

7. பரிபாடல்

பரிபாடலின் சிறப்பு

பரிபாட்டுக்களைத் தொகுத்த நூலுக்குப் பரிபாடல் என்று பெயர். கலிப்பாடல்களைத் தொகுத்த நூலுக்குக் கலித்தொகை என்று பெயரிட்டனர். இதுபோலவே பரிபாடலுக்குப் பெயர் சூட்டினர். பரிபாடல் என்பது ஒரு வகைப்பாட்டு. பரிபாடல் என்பது பாட்டினால் பெயர் பெற்றது.

பரிபாட்டில் பல வகைப் பாடல்களின் பகுதிகளையும் பார்க்கலாம். ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா ஆகிய நால்வகைப் பாடல்களும் கலந்த ஒரு வகைப்பாடலே பரிபாடல். இருபத்தைந்து அடிகள் முதல் நானூறு அடிகள் வரையில் இப்பாடலைப் பாடலாம்.

பரிந்து வருதல் பரிபாடல். பரிந்து வருதல்-ஏற்றுக் கொண்டு வருதல். பரிதல்-ஏற்றல்; தாங்குதல் அதாவது நால்வகைப் பாடல் உறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டு வருதல்.

பரிபாடலில் அகப்பொருட் செய்திகளும் காணப்படுகின்றன; புறப்பொருட் செய்திகளும் காணப்படுகின்றன.

‘‘அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கில் இன்பத்தையே பொருளாகக்கொண்டு, கடவுள் வாழ்த்து, மலை வியைாட்டு, நீர் விளையாட்டு என்னும் பொருள்களைப் பற்றிக் கூறுவது பரிபாடல்’’ இது பேராசிரியர் பேச்சு.