பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்17

திருமால் திருப்பதியாக விளங்கியிருக்கின்றது. இதற்குப் பரிபாடலே உதாரணமாகும்.

வரலாற்றுண்மைகள்

தமிழர்களின் வாழ்க்கை வரலாறு; நாகரிக வளர்ச்சி; தமிழ்நாட்டு வேந்தர்களின் வரலாறு; புலவர்கள் வரலாறு; தமிழ்நாட்டிலிருந்த பழைய நகரங்களின் வரலாறு; இவைகள் இன்னும் சரியாக எழுதப்படவில்லை. இவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுவதற்கு எட்டுத் தொகை நூல்களும், பத்துப்பாட்டும் உதவி செய்கின்றன.

அகநானூற்றிலும், புறநானூற்றிலும் ஏராளமான வரலாற்றுக் குறிப்புக்கள் காணப்படுகின்றன. பதிற்றுப்பத்திலும் உண்டு. அவைகளையெல்லாம் ஆராய்ந்து வரிசைப்படுத்தி எழுதினால் பண்டைத்தமிழக வரலாறுகள் பலவற்றை அறிந்துகொள்ளலாம்.

பண்டைப் பழக்கவழக்கங்கள்

எட்டு்த் தொகை நூல்களைக் கொண்டு ஆரியர் நாகரிகம் இன்னது; தமிழர் நாகரிகம் இன்னது என்று பிரித்துக் காண முடியாது. அவைகளிலே காணப்படும் பழக்க வழக்கங்களைத் தமிழ்நாட்டுப் பழக்கவழக்கங்கள், தமிழருடைய பழக்கவழக்கங்கள் என்றுதான் கொள்ளவேண்டும்.

அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் வகுப்புப் பிரிவுகள் காணப்படுகின்றன. துடியன், பாணன் பறையன், கடம்பன் என்னும் குடிப்பெயர்கள் காணப்படுகின்றன. குன்றவர், பரதவர், ஆயர், மறவர், உழவர் முதலிய ஐவகை நிலத்து மக்களின் பெயர்கள் காணப்படுகின்றன.

சிவபெருமான், திருமால், முருகன், பலராமன் போன்ற பலவகையான கடவுள் வணக்கங்கள் காணப்படுகின்றன.