18 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
இன்னும் பலவகைப்பட்ட தெய்வவணக்கங்களும் காணப்படுகின்றன. பெரும்பாலான மக்கள் தெய்வ நம்பிக்கையுடையவர்களாகவே வாழ்ந்தனர். தெய்வங்களுக்குக் கோயில்கள் கட்டப்பட்டிருந்தன; திருவிழாக்கள் நடத்தினர்; பலியிட்டுத் தெய்வங்களை வணங்கினர். நோய் நீங்கவேண்டுமென்றும், தாங்கள் எண்ணிய காரியங்கள் நிறைவேறவேண்டுமென்றும் தெய்வங்களுக்குப் பிரார்த்தனை செய்துகொண்டனர். மழை பெய்வதற்கும், பெய்யும் மழையை நிறுத்துவதற்கும் தெய்வங்களை வேண்டிக்கொண்டனர். பாப புண்ணியங்கள் உண்டு; மோட்சம்; சுவர்க்கம், நரகம் முதலியவைகள் உண்டு; மறுபிறப்பு உண்டு; ஊழ்வினையுண்டு; தவம் புரிவதனாலேயே நன்மை பெற முடியும் என்ற நம்பிக்கைகள் தமிழரிடம் குடிகொண்டிருந்தன. பிதிர்க்கடன் செய்வதற்குப் புதல்வர்ப் பேறு வேண்டும் என்றும் நம்பினர். வடமொழி தமிழகத்திலே வழங்கியிருந்தது. வடமொழி வேதங்கள் ஓதப்பட்டு வந்தன. தமிழ் மன்னர்கள் வேத வேள்விகளை ஆதரி்த்து வந்தனர். இராமாயண, பாரத வரலாறுகள் சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன. இந்த எட்டுத்தொகை நூல்களிலும் இவைகளைக் காணலாம். தமிழர்களுக்கு இவ்வரலாறுகள் தெரிந்திருந்தன; இவைகளைப்பற்றி அவர்கள் பேசிவந்தனர். திருமால், சிவபெருமான், செவ்வேள் ஆகிய கடவுளர்களைப் பற்றிய புராண வரலாறுகள் தமிழ்நாட்டிலே வழங்கி வந்தன. |