பண்டைத்தமிழ்ப் புலவர்கள் வடநூல்களையும், வடநூற்கருத்துக்களையும் வெறுக்கவில்லை. அவைகளைப் பாராட்டினர். அக்கருத்துக்களைத் தங்கள் பாடல்களிலே அமைத்துப் பாடி வந்தனர். தமிழர்கள் அந்நிய நாட்டினரையோ, அந்நிய மொழியினரையோ வெறுக்கவில்லை. அவர்களுடன் ஒன்றுபட்டுப் பழகி வந்தனர். மொழி வெறுப்பு, இன வெறுப்பு இரண்டும் பண்டைத் தமிழர்களிடம் தலைகாட்டியதேயில்லை. இவ்வாறு வாழ்ந்த தமிழர்கள் உயர்வாகத்தான் வாழ்ந்தார்கள்; வாழ்க்கையிலே வழுக்கி வீழ்ந்துவிடவில்லை. இவ்வுலக வாழ்க்கையிலே இன்புற்று வாழ்வதே மக்கள் கடமையென்று கருதினர்; இவ்வுலகில் நன்னெறியைப் பின்பற்றி இன்புற்று வாழ்பவனே மறுவுலகிலும் இன்புற்று வாழ்வர் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்தனர். அவர்கள் சிறந்த வீரர்களாக - வள்ளல்களாக - அறிஞர்களாக - கலைஞர்களாக - புலவர்களாக - வாழ்ந்து வந்தனர். இவ்வுண்மைகளையெல்லாம் எட்டுத் தொகை நூல்களிலே காணலம். நூல்வரிசை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை நூல்கள். இவ்வரிசையே எட்டுத்தொகை நூல்கள் இன்னவை என்று சொல்லும் வெண்பாவில் அமைந்திருக்கின்றது. இவ்வரிசை, நூல்களின் சிறப்பையோ, அமைப்பையோ கருதி வைக்கப்பட்டதன்று. எட்டு நூல்களின் பெயர்களையும் ஒரு வெண்பாவில் சொல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன்தான் அவ்வெண்பா எழுதப் பட்டிருக்கின்றது. |