8. பதிற்றுப்பத்து நூல் வரலாறு பத்துப் பாடல்கள் அடங்கிய பத்து நூல்களின் தொகுதிக்குப் பதிற்றுப்பத்து என்று பெயர். பத்துப்பாடல்கள் கொண்ட ஒரு நூலைப் பதிகம் என்றும், நூறு பாடல்கள் கொண்ட ஒரு நூலைச் சதகம் என்றும் பிற்காலத்தார் கூறுவர். பிற்காலத்தார் கொள்கைப்படி பத்துப் பதிகங்களைக் கொண்டது பதிற்றுப்பத்து என்று கூறிவிடலாம். பதிற்றுப்பத்து நூறு பாடல்களைக் கொண்டது. இன்று இந்நூலில் எண்பது பாடல்கள்தாம் இருக்கின்றன. இப்பொழுது இந் நூலிலே முதற்பத்தும் இல்லை; இறுதிப்பத்தும் இல்லை. இப்பொழுது இருப்பவை இரண்டாம் பத்து முதல் ஒன்பதாம் பத்து வரையில் உள்ள எட்டே பத்துக்கள்தாம். ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு சேர மன்னரைப் பற்றிப் பாடப்பட்டவை. முதற்பத்து எந்தச் சேரனைப் பற்றிப் பாடப்பட்டது? அதைப் பாடிய புலவர் யார்? பத்தாம்பத்து எந்தச் சேரனைப் பற்றிப் பாடப்பட்டது? அதைப் பாடிய புலவர் யார்? இச் செய்திகள் தெரியவில்லை. இப்பொழுது எஞ்சியுள்ள எட்டுப்பத்துக்களும் தனித்தனியே எட்டுச் சேர மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்டவை. இந்த எட்டும், எட்டுத் தனித்தனிப் புலவர்களால் பாடப்பட்டவை. |