174 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
இயல்பு. ஆண்கள் செய்யும் அநீதிகளையும் பெண்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்; அவர்களுக்குப் பெண்கள் அடங்கித்தான் வாழவேண்டும் என்ற கொள்கை அக்காலத்தில் வேரூன்றியிருந்தது. (பா. 20) பண்டைக் காலத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியுண்டு. அதற்கு ‘‘நிழல் காண் மண்டிலம்’’ (பா. 21) என்று பெயர். பரிபாடலைப் படிப்போர் இவைபோன்ற பல செய்திகளைக் காணலாம். பரிபாடலைப் பிற்கால நூல் என்று கூறுவோர் உண்டு பரிபாடற் பாட்டுக்களில் புராணக் கதைகள் இருக்கின்றன; தெய்வங்களைப் பற்றிய வணக்கப் பாடல்கள் இருக்கின்றன; வேதம், வேள்வி, அந்தணர்கள் பற்றிக் கூறப்படுகின்றன; வடமொழிச் சொற்கள் மிகுதியாகக் கலந்திருக்கின்றன; ஆகையால் அது பிற்கால நூலாகத்தான் இருக்கவேண்டும் என்பர். இது பொருந்தாக் கூற்று. வடமொழி வெறுப்பால் எழுந்த பேச்சு. பரிபாடலைப் பிற்கால நூல் என்பதற்குக் கூறும் காரணங்கள் சங்க நூல்கள் எல்லாவற்றுக்கும் பொருந்தும். பரிபாடலிற் கூறப்படும் செய்திகள் பத்துப்பாட்டிலும் காணப்படுகின்றன. ஏனைய எட்டுத் தொகை நூல்களிலும் காணப்படுகின்றன. இவ்வுண்மையை உணர்ந்தோர் பரிபாடலைச் சங்க கால நூல் அன்றென்று சொல்ல மாட்டார்கள். பரிபாடல், பிற்கால நூலாக இருந்தால் அது எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றாகச் சேர்ந்திருக்க முடியாது என்பதையும் இவர்கள் உணர வேண்டும். |