அவர்கள்மேல் பாடப்பட்ட பாடல்கள் பல உண்டு; ஆனால் அவர்கள்மேல் பாடப்பட்ட தனத்தனி நூல்கள் இல்லை. சேர மன்னர்களிலே பத்து மன்னர்கள் தனித்தனி நூல்களுக்குத் தலைவர்களாக இருக்கின்றனர்; இதுவே சோழ பாண்டியர்களைவிடச் சேரர்கள் சிறந்த வீரர்கள் என்பதை விளக்கிக் காட்டும். இரண்டாம் பத்து இதைப் பாடிய புலவர் குமட்டூர்க்கண்ணனார். இவரால் இயற்றப்பட்டது இந்த ஒரே நூல்தான். இந்த இரண்டாம் பத்தின் தலைவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பவன். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், குமட்டூர்க் கண்ணனாரின் தமிழ்ப் புலமையைப் பெரிதும் பாராட்டினான். இப்பாடல்களுக்காக உம்பற்காடு என்னும் பகுதியைச் சேர்ந்த ஐந்நூறு ஊர்களைப் பிரமதாயமாகக் கொடுத்தான்; தென்னாட்டு வருமானத்தில் ஒரு பகுதியை முப்பத்தெட்டு ஆண்டுகள் வரையிலும் கொடுத்துவந்தான். இச் செய்தி இப் பத்தின் பதிகத்தின் இறுதியிலே காணப்படுகின்றது. இந்த இமயவரம்பன் ஐம்பத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந்தான். குமட்டூர்க் கண்ணனார் பிரமதாயம் பெற்றார் என்று கூறப்படுவதால் இப்புலவர்அந்தணர் வகுப்பினர், என்று அறியலாம். பிரமதாயம்-அந்தணர்க்கு அளிக்கும் பூதானம். இமயவரம்பன் - இமயமலையை எல்லையாக உடையவன். இம் மன்னவன் இமய முதல் குமரி வரையுள்ள பாரதநாடு முழுவதையும் ஆண்டவன். இதனாலேயே நெடுஞ்சேரலாதன் என்ற பெயருக்கு முன்னால் இமய வரம்பன் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றான். |