பறந்தோடும். உணவுப் பண்டங்களைப் பெருக்குவோர் உழவர்கள். உழவர்கள் ஒரு துயருமின்றி உரிமையுடன் வாழ்ந்தால்தான் உணவுப் பண்டங்கள் பெருகும். இந்த உண்மையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் உணர்ந்திருந்தனர். ஆதலால் அவர்கள் உழவர்களிடம் உள்ளன்பு காட்டினர்; உற்பத்தியைப் பெருக்கினர்; நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்தனர். இவ்வுண்மையை இந்நூற் பாடல்களிலே காணலாம். ‘‘ஏரைப் பாதுகாக்கும் உழவர்களைப் பாதுகாத்து’’ இதன் மூலம் உனது நாட்டுக் குடிமக்களையெல்லாம் பசிக்காளாகாமல் பாதுகாப்பாயானால் உன் பகைவர்களெல்லாம் உன்னைக் கண்டு அஞ்சுவார்கள். உன் பாதத்தை வணங்குவார்கள். பகடு புறந்தருநர் பாரம் ஒம்பிக் குடி புறந்தருகுவை யாயின், நின் அடிபுறந் தருகுவர் அடங்காதோரே’’. (பா. 35) வெள்ளைக்குடி நாகனார் என்னும் புலவர், கிள்ளிவளவன் என்னும் சோழ மன்னனுக்குச் சொல்லிய அறிவுரையிலே இவ்வுண்மையை விளக்கி யிருக்கின்றனர். நீர்ப்பாசன வசதியைப் பெருக்கினால்தான் நிலம் வளப்படும்; உழவர்களும் ஊக்கமுடன் உழைத்து உற்பத்தியைப் பெருக்குவார்கள். நீர்ப்பாசன வசதியற்ற நாட்டிலே உற்பத்தி பெருக முடியாது. ஆதலால் அரசாங்கத்தின் முதற் கடமை நாட்டிலே நல்ல நீர்ப்பாசன வசதிகளை ஏற்படச் செய்வதுதான். இவ்வுண்மையை எடுத்துக்காட்டுகின்றது ஒரு செய்யுள். ‘‘உண்ணும் நீரின்றேல் உடம்புகள் அழியும். உடம்புகளுக்கு உணவு கொடுத்தோரே உயிர் கொடுத்தோராவர். |