பக்கம் எண் :

32எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

‘‘வாழி ஆதன்! வாழி அவினி!
பகைவர் புல்லார்க; பார்ப்பார் ஓதுக!
என வேட்டோளே யாயே.                                          (பா. 4)

ஆதன் அவினி என்னும் மன்னன் வாழ்க! அவனுடைய பகைவர்கள் போரிலே அடிபட்டு வீழ்ந்துமாண்ட இடத்திலே புல் முளைத்துப் போகட்டும். நாட்டின் நன்மையைக் கருதிப் பார்ப்பார்கள் வேதங்களை ஓதுவார்களாக என்று விரும்பினாள் அன்னை”

“வாழி ஆதன், வாழி அவினி;
வேந்து பகை தணிக! யாண்டு பலநந்துக!
என வேட்டாளே யாயே!                                          (பா. 6)

ஆதன் அவினி வாழ்க! அரசனுடைய பகைவர்கள் அவன் அடிக்கீழ்ப் பணிந்து கிடப்பார்களாக! அரசன் பல்லாண்டு சிறந்து வாழ்க! என்று விரும்பினாள் அன்னை’’.

‘‘வாழி ஆதன்! வாழி அவினி
அறம் நனிசிறக்க! அல்லது கெடுக!
என வேட்டோளே யாயே.                                         (பா. 7)

ஆதன் அவினி வாழ்க! அறங்களெல்லாம் சிறந்து வளர்க! அதர்மங்களெல்லாம் ஒழிக! என்று விரும்பினாள் அன்னை’’.

“வாழி ஆதன்! வாழி அவினி!
அரசு முறை செய்க! களவு இல்லாகுக!
என வேட்டோளே யாயே.                                         (பா. 8)

ஆதன் அவினி வாழ்க! அரசன் அறநூல் நெறிகளை அறிந்து ஆட்சி புரிக! நாட்டில் திருட்டு நடைபெறாமலிருப்பதாக! என்று விரும்பினாள் அன்னை’’.

பண்டைத் தமிழ் மக்கள் சிறந்த அரசாட்சியை விரும்பினர்; நல்லாட்சியை ஆதரித்து வந்தனர்; என்பதை இவைகளாற் காணலாம்.