பக்கம் எண் :

34எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

“மழை வருவதை முன்கூட்டியே அறிந்து மயில்கள் ஆடுகின்ற மலை’’ இதனால் மழையின் வரவை அறியும் சக்தி மயிலுக்கு உண்டு என்று கூறப்பட்டது. சிற்றுயிர்களைப் பற்றிய இத்தகைய செய்திகளை இந்நூலிலே காணலாம்.

அன்னையின் அன்பு

களவு மணத்திலே ஈடுபட்டிருந்தாள் ஒரு பெண். அவள் தன் காதலனுடன் புறப்பட்டு அவனூர்க்குப் போய்விட்டாள். இச்செய்தியை அறிந்த அவள் தாய் வருந்தினாள். ஆயினும் அவள் மகளுடைய செய்கையை வெறுக்கவில்லை; பாராட்டினாள்.

‘‘உழவர்கள் அடிக்கின்ற பறைக்குத் தக்கவாறு மயில்கள் ஆடிக்கொண்டிருக்கின்ற-உயர்ந்த பெரிய மலையிலே படிந்திருக்கின்ற-மேகங்கள் புறப்பட்டு மழையைப் பெய்யட்டும். அந்தப் பாலைவனம் இனிய குளிர்ந்த வழியாகக் கடவது. இதுதான் அறநெறி யென்று தேர்ந்த-எனது-பிறைபோன்ற நெற்றியையுடைய சிறுமி சென்ற பாலைவனம் இவ்வாறு இனியதாகுக.

மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்,
உயர் நெடும் குன்றம், படுமழை தலைஇச்,
சுரம், நனி இனிய வாகுக தில்ல;
அறநெறி இதுவெனத் தெளிந்த, என்
பிறை நுதற் குறுமகள் போகிய சுரனே’’                              (பா. 371)

இதனால் அக்காலத்திலே கருத்தொருமித்த காதலர்கள் இருவர் தங்கள் விருப்பப்படி மணம் புரிந்து கொண்டதைக் காணலாம். இத்தகைய மணத்தை அக்காலத்து மக்கள் ஆதரித்து வந்தனர். இருவரும் ஒன்று சேர்ந்து போன பிறகுதான் அவர்கள் மணம் புரிந்து கொண்ட செய்தி ஊரார்க்கு வெளிப்பட்டது. ஊரார் அறியாமல் அவர்கள் மணவாழ்வு