நடத்தி வந்தது களவு மணம். ஊரார் அறியும்படி இருவரும் ஒன்று சேர்ந்து போனது கற்பு மணம். இப்படிச் சென்ற தம்பதிகள் தன்வீட்டுக்குத் திரும்பி வரவேண்டும் என்று தாய் வேண்டிக்கொள்ளுவாள். ‘‘காக்கையே நீயும் நின் சுற்றமும் அருந்தும்படி பச்சை மாமிசமும் பசுமையான கொழுப்பும் கலந்த அரிசியைப் பொற்பாத்திரத்திலே தருகின்றேன். பகைவர்மேல் கொடிய கோபத்தைக் காட்டுகிறவன்-வெற்றி பெறும் வேற்படையை யுடையவன்-காளை போன்றவன் ஆகிய அவனுடன் அழகிய கூந்தலையுடைய என் மகளையும் வீட்டுக்கு வந்து சேரும்படி கரைந்து அழப்பாயாக! மறுவில் தூவிச் சிறுகருங்காக்கை! அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப் பச்சூன் பெய்த பைந்நிண வல்சி, பொலம்புனை கலத்தில் தருகுவென்மாதோ! வெம்சின விறல் வேல் காளையொடு, அம்சில் ஓதியை, வரக் கரைந்தீமே’’ (பா. 391) காக்கையைப் பார்த்து, தாய் இவ்வாறு வேண்டிக் கொள்ளுகின்றாள். களவு மணம் பெற்றோர்களாலும், உற்றார்களாலும் ஆதரிக்கப்பட்டுக் கற்புமணமானதை இப்பாடலால் அறியலாம். உள்ளத்தை உரைத்தல் மற்றவர்களின் உள்ளத்தில் நிகழும் எண்ணங்களை அப்படியே எடுத்துக் காட்டுவதில் சங்ககாலத்துப் புலவர்கள் மிகவும் திறமை யுடையவர்கள். அவர்கள் சொல்லுவது இயற்கையாகவும் இருக்கும். ஒரு பெண் தான் காதலித்த கணவனுடன் போய்விட்டாள். பெற்றதாய் அவள் பிரிவைத் தாங்கமாட்டாமல் வருந்தினாள். |