பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்51

அடிபிடிக்காமல் அடிக்கடி கலக்கிவிட்டுக்கொண்டே இனிய புளிக்கறி செய்தாள். அதை எண்ணெயிலே பொரித்துக் கொட்டினாள். ‘‘குய்’’ என்ற ஓசையுடன் எழுந்த அந்தப் புகை அவளுடைய குவளை மலர் போன்ற கண்களை மறைத்தது.

கணவனுக்கு உணவிடும்போது அவள் வருந்திச் சமைத்த புளிக்கறியைப் பரிமாறினாள். ‘‘கறி மிகவும் நன்றாயிருக்கின்றது’’ என்று சொல்லிக்கொண்டு அவன் அதைச் சுவைத்துச் சாப்பிட்டான். அதைக் கண்டு அவளுடைய முகம் மகிழ்ச்சியடைந்தது.

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழா அது உடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்,
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்,
இனிது எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே. ’’                      (பா. 167)

இதுவே பெண்களின் இயற்கைத் தன்மையை எடுத்துக் காட்டும் பாடல்.

முயற்சியும் செல்வமும்

செல்வம் இல்லாவிட்டால் இல்லறத்தை இனிது நடத்த முடியாது. ஒவ்வொருவரும் தாமே வருந்தி உழைத்துப் பொருள் தேடவேண்டும். அந்தப் பொருளால் தாமும் இன்புறவேண்டும்; பிறருக்கும் உதவவேண்டும். இக்கருத்துக்களைப் பாலைத்திணைப் பாடல்களிலே காணலாம்.

‘‘முன்னோர் தேடிவைத்திருக்கும் செல்வத்தைச் செலவழித்துக் கொண்டிருப்போர், செல்வம் உள்ளவர் என்று சொல்லப்படமாட்டார்; அவர் வறுமைக்கு ஆளாவார். வறியவர்களின் இல்வாழ்வு, பிச்சையெடுத்து வாழ்வதைக் காட்டிலும் இழிவான வாழ்வு. இவ்வாறு முன்னோர்கள் சொல்லி