பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்89

காதலர் பிணைப்பு

கணவன் நலத்திலே கருத்துடையவளா யிருப்பவளே கற்புடைய மனைவி. கணவன் பிரிந்து போயிருக்கும் பொழுதும் அவனிடம் வெறுப்படைய மாட்டாள், அவன் கருதிச் சென்ற காரியத்தலே வெற்றி பெற்று விரைவில் திரும்ப வேண்டும் என்று விரும்புவாள். தன் கணவன் மேல் எவரும் எப்பழியும் சுமத்த இடந்தர மாட்டாள்.

‘‘எப்பொழுதும் விழாக்கள் நடந்துகொண்டிருப்பதும் பகைவர்களுக்குப் பயமூட்டக் கூடியதுமான இப்பழமையான ஊரிலே வாழ்வோர் அனைவரும் குற்றமற்றவர்கள்; ஆனால் சேரியில் வாழும் பரத்தையரோ பலரையும் புறம் பேசும் பண்பினர்; பழிக்கத்தக்க ஒழுக்கமுடையவர்கள்; கொடுஞ்சொல் கூறும் குணத்தினர்; அவர்கள் என்னை இகழ்ந்து பேசினாலும் பேசட்டும்.

நுண்மையான வேலைப்பாடமைந்த ஆபரணங்களை அணிந்த - எருமை என்பவனது குடநாட்டைப் போன்ற - என்னுடைய நல்ல அழகு தொலைந்தாலும் தொலையட்டும்.

பொருள்தேடப் போயிருக்கும் காதலர் என்றும் நோயின்றி இனிது வாழ்க.

அழியாவிழவின் அஞ்சுவரு மூதூர்ப்
பழியிலர், ஆயினும் பலர் புறங்கூறும்
அம்பல் ஒழுக்கமும், ஆகியர் வெம்சொல்
சேரியம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;
நுண்பூண் எருமை குடநாட்டன்ன என்
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்
நோயிலராக நம் காதலர்’’                                        (பா. 115)