88 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
சொல்லும் இதுவேயாகும்; என்று இப்படிச்சொல்லுகிறவளைப்போல என் எதிரில் வந்து நின்றாள். இக்கருத்தைக் குறிப்பால் காட்டி-முகத்தால் மொழிகின்றவளாய்-சித்திரத்தைப் போல-உள்ளத்திலே என் பிரிவாகிய ஒன்றையே நினைத்து-ஒதுங்கி நின்றாள். கண்ணின் கருமணியை மறைத்த-நடுக்கந்தரும்-நீர் நிறைந்த கண்களுடன், மார்பிலே அணைத்துக்கொண்டிருந்த புதல்வனுடைய மெல்லிய தலையிலே உள்ள-நல்ல நீரிலே தோன்றிய -தொடுத்த - செங்கழுநீர் மாலையை முகர்ந்து பெருமூச்சுவிட்டாள். அப்பொழுது அச்சிறந்த மலர் தன் அழகிய உருவிழந்து-அழகு சிதைந்த நிலையைக் கண்டோம்; உடனே புறப்பாட்டை நிறுத்தினோம்‘‘. பரல் முரம்பாகிய பயமில் கானம் இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு அன்றுஎன மொழிந்த தொன்றுபடு கிளவி அன்னவாக எண்ணுநள் போல, முன்னம் காட்டி முகத்தின் உரையா, ஓவச் செய்தியின் ஒன்றுநினைந்து ஒற்றிப்; பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத் தூநீர் பயந்த துணையமை பிணையல் மோயினள் உயிர்த்தகாலை, மாமலர் மணியுரு விழந்த அணியழி தோற்றம் கண்டே கடிந்தனம் செலவே. (5) ஒரு தலைவன் தானே தன் நெஞ்சுடன் கூறிக்கொண்டதாக அமைந்துள்ளது இப்பாட்டு. பண்டைக்காலத்தில் காதலர்கள் எவ்வாறு ஒன்றுபட்டு வாழ்ந்தனர்; அவர்களுடைய இல்லற வாழ்வு எவ்வளவு சிறந்திருந்தது; என்பதை இப்பாடலால் அறியலாம். |