1. பால காண்டம் 1. திரு அவதாரம் யோ. 1: 1 - 3: கலா,4:5 1. காலமேதோன் றாமுனுள வார்த்தையதே காலமாதி யந்தமிலா வார்த்தையதே மூலதெய்வ மோடிருந்த வார்த்தையதே மூலதெய்வ மாயிருந்த வார்த்தையதே ஞாலமாமெல் லாந்தனது வன்மையினால் ஞானமாய்ப் படைத்ததோரே வார்த்தையதே காலமாக ரூபமாகி மானுடனாய்க் காசினியிற் றோன்றியதாம் வார்த்தையதே. 2. கடவுளைமெய் யாயறியா இவ்வுலகே காணவுமே ப்ரத்தியக்ஷக் காட்சியாயே கடவுளது மெய்மயமே அன்பெனவே காட்டவுமே காசினியின் மாந்தருக்கே கடவுளது மக்களிங்கே கொள்கடந்த ஜீவியமும் ஈதெனவே காட்டவுமே கடவுளையே விட்டகன்ற பாவியரின் காருணிய மீட்பராகத் தோன்றியதே. 3. அம்புவியற் பாவியரீ டேறுதற்காய் அன்புருவா யம்புவியற் சென்றுதிப்போம் அம்புவியில் நிர்மலராய் மாதுவித்தாய் அன்பினவ தாரமாயே சென்றுதிப்போ வம்புசெறி மானுடருக் காய்ப்பிணையாய் வான்பலியே யாகமன மானமென அன்பொடுமே தெய்வசுதன் தமையீந்தே அன்பினவ தாரஅஸ்தி பாரமிட்டார். 4. காலநிறை வேறவுமே தெய்வசுதன் மாட்சிகனம் யாவுமேக ளைந்துமனுக் கோலமது கொண்டுமேயோர் கன்னியிடம் கோதிலாதே அற்புதமாய் உற்பவித்தோர் பாலகனாய்ப் பாரிதனிலே ஜெனித்தே பாடுபட்டு க்ரூசினிலே மாண்டுயிர்த்தே சீலமொடு பாவியரை மீட்டதொரே திவ்வியஅவ தாரனின்பா தம்பணிவோம். 2. திரு க்ஷேத்திரம் 5. மண்தலத்தில் மாபெரிய கண்டமாமா ஆசியாவின் மேல்கரையின் நாடதுவே மண்தலத்தில் ஒர்சிறிய நாடதுவே மாவிருகண்டம் நெருங்கும் நாடதுவே பண்பொடுமே பல்வளஞ்செ றிந்துளதால் பால்நறவு மோடுநாடென் பேருளதே எண்பலசிற் றாட்சிஜனங் கொண்டுளதாய் மாமகிப ரிச்சைவைத்த நாடதுவே 6. கண்டஎழு ஜாதியருள் ளோர்ஜனத்தால் கானானென் பேருளதாம் நாடதுவே பண்டைநா ளங்குளபெ லிஸ்தராலே பாலஸ்தினென் பேருளதாம் நாடதுவே பண்டபிராம் வாக்கடைந்த பான்மையினால் வாக்களிக்கப் பட்டநாடென் பேருளதே மண்டலாதி பன்தவீதும் மாமகனாம் மாஞானிசல் மோனுமர சாண்டநாடே |