7. விண்ணவர்கள் பல்சமயங் காட்சிதந்தே நற்றிருநா டென்பேர்கொள் நாடதுவே புண்ணியனங் குற்பவித்த மாட்சியினால் புண்ணியநா டென்விசேடப் பேருளதே மண்ணவராம் மானுடர்க்கு வேண்டியதாம் மாமகத்வ மீட்பிவணே தோன்றியதால் மண்ணிதிலே நாடிதனின் மான்மியம்போல் மாமகத்வ முற்றதொரு நாடுளதோ? 8. இத்தரையி லித்துணையா மாட்சியொடேமிக்கஎழில் சீருளதாம் நாடிதனை அத்தனேமுன் சொன்னதொரு வாக்கதேபோல் ஆபிரகாஞ் சந்ததியாம் இஸ்ரவேலா எத்தனைநூற் றாண்டுகளாங் காலமாயே இன்பமொடே ஆண்டனுப வித்திருந்தும் அத்தனது மாகிருபை தாமறந்தே அத்தனின ருள்நெறியே நீங்கினரே. 9. இவ்வுலகில் அந்நெறியை நீக்கிவிடில் எம்மற்கு மிப்புவியற் சீருளதோ இவ்வுலகில் அந்நெறியைக் காத்துவரில் இவ்வுலகு மவ்வுலகும் க்ஷேமமாமே இவ்விதமாஞ் சீரனுப வித்தஇவர் எம்பரனின் நீதிநெறி நீங்கியதால் வெவ்விதபல் ராஜ்ஜியத்துட் பட்டவராய் மேன்மையுஞ்சு யாட்சியுமே தாமிழந்தார். 10. மகத்துவமாம் ஆட்சிதனைத் தாமிழந்தே மாசிறுமை யுற்றராமிச் ஜாதியரே மகத்துவமுள் பூர்வராஜ்ஜி யங்களுளே மாபலத்த ராஜ்ஜியமாம் ரோம்ராஜ்ஜியம் மகத்துவமாய்த் தம்முனாலே யாண்டிருந்த மாபெரிய கிரேக்கரது ராஜ்ஜியத்தை மகத்துவமாஞ் சேனைகளால் வென்றவரின் மாமகத்வ ஆட்சியின்கீ ழாயினரே. 11. மாபெரிய ராஜ்ஜியமா மீதினையே மாட்சியொடேயாண்டிருந்த மன்னவருள் மாமகிமை யுள்ள ருஸ்து ராயனவன் மாட்சியொடே யாண்டுவருங் காலமதில் மாகொடிய கன்மிகொலை பாதகங்கள் தாட்சியின்றிச் செய்தவனா மாகுரூரன் மாஎரோதே யென்பவனே தோமியனாம் மன்னவன்யூ தாவிலர சாண்டனனே. 3. திருமாதா - லூக். 1 : 26 - 38. 12. இக்காலை இஸ்ரவேலாம் நாடிதிலே இசைந்தவட நாடுகலீ லீயினிலே அக்காலை நாகரிக யூதராலே அவமதிக்கப் பட்டதொரு நாசரேத்தில் எக்காலுங் கீர்த்தியுள்ள இஸ்ரவேலின் இறைவனாந்தா வீதுடைய வம்சமதில் எக்காலும் மாமதிப்புப் பெற்றதொரு எழிலணங்கு கன்னிமரி யம்மனுளார். 13. அம்மாதைப் பெற்றதொரு அன்னையரோ அன்னாளென் பக்தியுள மாதரசி அம்மா! இக் கன்னியரின் சீர்குணங்கள் சாந்தமருள் தாழ்மைபரி சுத்தமொடே இம்மாதின் தெய்வபயம் த்யானமுமே இன்பமருள் தர்மகுணம் சீருளவாம் இம்மாபேர் நற்குணமார் மங்கையரை ஜோசபெனும் பக்தனுக்கே நிச்சயித்தார். |