92. அவனே தக்கவோர் வயதுளோ னானவ னதனால் அவனைக் கேண்மினே யவன்பதிற் சொல்வனென் றனரே அவர்யூ தர்க்குமே பயந்ததாற் சொன்னரவ் விதமே தவறா தாலய மிருந்துதள் வாரெனப் பயந்தே. 93. இயேசு வைக்கிறித் தென்றெவ னறிக்கை செய்திடின் யோசிக் காதுமே தள்ளவே யுறுதிசெய் திருந்தார் ஆதலா லவனது பெற்றவ ரவனையே வினவும் போதும் பிராயமே யுள்ளவ னெனப்புகன் றனரே. 94. அந்த கனையவர் மறுதர மழைத்துரைத் தனரே சிந்தித் துரைப்பாய் கடவுளை மகிமைப் படுத்து இந்த மனுடனோர் பாவியே யெனவறிந் துளமே இந்த விதமொழி கேட்கவே யிதுபதி லிசைத்தான். 95. அறியே னேயொரு பாவியா மனுடனென் றவரை அறிவே னேயொரு காரியந் திடமிக அதுவோ குருட னாயிருந் தேனிதோ குருடுநீங் கியுமே அறியா தாமவை காண்கிறே னழகிய பொருட்கள். 96. என்ன செய்தனன் நயனமே யெப்படித் திறந்தான் முன்ன மேயுமக் குரைக்கநீர் கேட்கவில் முழுதும் பின்னை யேன்பிறி தொருதரங் கேட்கிறீ ரெனையே அன்ன வர்க்குநீர் சிசியரே யாகவும் மனதோ? 97. ஏசியே இகழ்ந்து பேசியே யெழும்பின ரிவன்மேல் சீட னவற்குநீ யாங்களோ மோசெயின் சிசியர் மோசை யொருபரன் பேசினர் முன்னறிந் துளேம்யாம் வாசித் தறிகுவாய் வந்தவ னெங்கிருந் தறியோம். 98. அறிந்தி லேமெவ ணிருந்துவந் தவனென அறைதல் அறிந்தி ராததோ ரதிசய மெனதுகண் திறந்தும் அறிந்து ளேம்பரன் அசுசியர் கெடுபா வியர்க்கே சிறிதே னுஞ்செவி கொடுப்பதில் லவர்செபங் களுக்கே. |