50. தரிசித் தோந்திருத் தூதரையே யெமையவர் தேற்றியே திடப்படுத்தி பரிசுத் தரேயெழுந் தாரெனவே பகர்ந்தன ரெமக்கென் றேயுரைத்தனர் துரிதமா யெமிற்சிலர் சென்றவணே கண்டனர் சொற்படி யிருக்கவுமே பரிசுத் தரையவர் காணவில்லை பதைத்துமே திரும்பினர் எனவுரைத்தார். 51. தரிசியர் கூறிய யாவையுமே தாம்விசு வசியா மதியிலரே இருதய மந்தமே யுற்றவரே யிவைகளை யுணரவே சக்தியற்றீர் கிறிஸ்துவோ இவ்விதம் பாடுபட்டே கெடியாய் மகிமையுட் செலவேண்டும் அறிந்திலீ ரோஇவை யாமனைத்தும் அவசியம் நடைபெற வேண்டியதே. 52. திருமறை யுரைப்பதை யவரறிய திடமொடு மோசே தரிசியரும் அருமையா யனைவரு முரைத்தவையா மனைத்துமே தமையே குறித்ததென பெருமையே பெறுமுன் னுபத்திரவம் மரணமும் பின்னுயிர்த் தெழுதலுமென் றிருவருந் தெளிவா யுணர்ந்துகொள இதவுப தேசமே யருளினரே. 53. நெருங்கின ரவர்போ மூரினையே நேயமாய்ப் பேசியே செலும்பொழுதில் அருமையாங் குருபரன் காட்டினரே யப்புறந் தாண்டியே செல்பவர்போல் வருந்தியே கேட்டன ரிருவருமே அந்தியு மானதே பகற்கடந்தே இருமெம தொடும்நீர் ராவிலென யேசுவுஞ் சென்றன ரவரொடுமே. 54. அடுத்தனர் வீட்டினுட் சென்றனரே யமர்ந்தனர் பந்தியி லவரொடுமே எடுத்தனர் கையினி லப்பத்தை யிதையா சீர்வதித் தேபிட்டார் கொடுத்தன ரப்பத் துணிக்கையைச் சிஷியருட் கொண்டா ரத்துணிக்கை விடுத்தனர் கண்களின் மயக்கமுமே விழித்தறிந் தாரவர் ஜேசுவென. 55. திருப்பரன் மனுமகன் மறைந்தனரே திடுமென அக்ஷ்ண மதிசயமாய் ஒருவரை யொருவர் விழித்தனரே யுணர்ந்தனர் பரவச மாயினரே திருமறை வசனம் வரும்வழியில் தெளிவுற விளங்கவே சொலும்பொழுதில் இருதயம் நமக்குட் சுடரெழும்பிக் கொழுந்துவிட் டெரியவிலை யோவென்றார். |