13. இத்தரை நின்றவர் எழுந்தன ருயர பக்தரண் ணாந்தே பார்த்துநிற் கவுமே அத்தரு வாயிலோ ரழகிய முகிலே அத்தனை மூடிய தவர்விழி களுக்கே. 14. அமலனை மறைத்தாம் அம்முகி லொடுமே அமலனின் தூதரா மம்பரர் குழுமி விமலனை யெதிர்கொள வந்தனர் விரைந்தே அமலனைச் சூழ்ந்தவர் ஆர்ப்பரித் தனரே. 15. எதிரமைழத் தனரெக் காளத் தொனியால் எதிரமைழத் தனரின் னிசைவீ ணையொடு அதிபதி யவரை யாழ்தம் புரொடே துதித்தனர் தாளஞ் சுரமண் டலத்தால். 16. விண்கோன் சுதனே விண்ணவ ரரசே எங்கோன் பரனே எழிலுயர் யெகோவா மண்தலத் தினிலே மனுடரைப் புரக்க மண்தல முதித்தீர் மனுடனாய் ஜெனித்தீர். 17. சத்துருப் பேயாற் சாபமுற் றவராம் புத்திர ரானோர் புனிதரா கவுமே அத்தரை யினிலே யருளொடு மவர்க்கே மித்துரு வாகியே மிகுநலம் புரிந்தீர். 18. தீயனாம் பேயைத் தீர்க்கமா யெதிர்த்துந் தூயவன் மையினாற் றோற்கவே பொருதீர் மாயவன் கையினில் மாயுமா னுடரை நேயமாய் மீட்டவர் மேசியா வெனவே. 19. மரணமே யிலராம் மகத்துவ தேவா மரணவா யுழலும் மனுடரை மீட்க மரணமே யடைய மனுடனு மானீர் மரணமே யடைந்தே மரணமே வென்றீர். |