3. கலிலோயா ஊழிய பர்வம் 28. ஆரம்பம். மத். 4 : 12; மாற். 1 : 14, 15; லூக். 4 : 14; யோ. 4 : 43-45. 1. இருதினங் கழிய சமாரியா விருந்தே யேகினர் கலிலிநா டதற்கே குருபர னவணே குணமுற வடைந்தே கூறினர் சுபவிசே டமெங்கும் நெருங்கின தணுகி பரமராஜ் ஜியமே காலமும் நிறைவுறு கிறதே திரும்பியே மனமது சுவிசே டமதை நம்புவீர் திடமன தொடுமே. 2. திருப்பதி தனிற்செய் திருப்பணி விடையுஞ் சிறப்புறு மற்புத மனைத்தும் அருகினி லிருந்தே யறிந்தவ ரெவரும் அருமையா யேற்றன ரவரை அருட்குரு பரனே யதுதிசை யுளவாம் பலதலம் ஆலயம் புகுந்தே திருக்குரு பகர்ந்தார் சுபவிசே டமெங்கும் திரள்நலம் செய்துமே திரிந்தார். 3. சின்னதும் பெரிதும் ஊர்பல செறிந்த கலிலிதா டெவணுமே திரிந்தே அன்பொடு மெவர்க்கு மார்சுக மளித்தும் அருளுரு வாய்நடந் தனரே முன்னவன் ஜலத்தை மாற்றியே ரசமாய் முதன்முத லற்புதம் புரிந்தே சின்னஊ ரதுகா னாவிற் புகுந்தே சிலதினந் தங்கியே யிருந்தார். 29. அரசனின் மனுடன்மகன் சுகம்பெறல்.யோ. 4 : 46 - 54. 4. அங்கொரு தினமே யண்ணலை விரும்பி யணுகினன் பெரியவ னொருவன் அங்கபர் நகூமென் னூரினில் வசித்த அரசனின் மனுடரி லொருவன் வெங்கொடும் பிணியால் வீநிலை யடைந்த தனதுபிள் ளைமரியா திருக்க அங்கவ ரெழுந்தே நற்சுக மளிக்க அவரையே வேண்டினன் கனிவாய். 5. அன்பராம் பரனோ அவனை நோக்கியே அடையா ளமற்புதங் களையே இன்புற விழியா லறியா விடில்நீர் விசுவசிப் பதிலையென் றனரே துன்பமுற் றவனோ மகன்மரிப் பதற்குள் துரிதமாய் வரவேண் டினனே இன்புற யுரைத்தார் இறைவனே "செலுவாய் மகன்பிழைத் திருக்கிறான்" எனவே 6. வெம்பிவா டியவன் பிறவழி யறியான் விரும்பியே கற்பக மடைந்தோன் நம்புதற் கரிதாம் நலமிகு முரையை நம்பியே யதுகண மகன்றான் நம்பக மவமோ அவன்செலும் வழியில் நவின்றனர் செய்தியூ ழியரே தம்பியே பிழைத்தான் தனதுநோ யகன்றே எனச்சொலக் கேட்டவன் மகிழ்ந்தான். |