7. இந்தநல் விஷயம் கேட்டஅம் மனுடன் இணையிலா மகிழ்ச்சிகொண் டனனே எந்தனின் மகனே நற்சுக மடைந்த மணிப்பொழு தெதுவென வினவ விந்தை ஜுரமே நேற்றுநீங் கியதே யெழுமணிச் சமையமென் றனரே இந்தவே ளைதான் உன்மகன் பிழைத்தான் எனச்சொன பொழுதென் றறிந்தான். 8. அறிந்தனர் விஷயம் அன்னவ கைத்தார் அதிமிகு அதிசய மடைந்தார் தெரிந்தது மவரே யாவரு மவர்மேல் திடவிசு வசமடைந் தனரே விரிந்ததே யெவணும் விந்தையிவ் விஷயம் விளங்கவே குருபரன் புகழ்ச்சி புரிந்தவற் புதமுள் இரண்டுதா னதுவே அவரிவ ணடைந்தபின் னருமே. 9. தரித்தனர் சிலநாள் தண்ணளிக் குருவே கலிலிநா டெனுமது திசையில் விரித்துரைத் தனர்விண் போதக மதையே விதவித மாமுவ மைகளால் திரிந்தும் வைத்தியர் தீர்த்தார் தெருவினி லகத்தினில் வனத்தினில் பரிந்துசென் றனரே பண்டிகை வரவே பதியெரு சலையெனும் நகர்க்கே. 30. பெதஸ்தா திமிர்வாதன்: ஓய்வுதினத் தர்க்கம். யோ. 5. 10. வந்ததும் பரனே தம்வழ மையதாய் வகையொடு மூழியம் புரிந்தார் வந்தன ரொருநாள் ஆடுசெல் வழியாம் மறிதிறப் பெனுந்தலத் தருகே இந்தவோ ரிடத்தி லிருந்ததோர் சுனையே பெதஸ்தாப் பெயருள குளமே அந்தவோர் குளத்தி னண்மையி லமைந்தே இருந்தன ஐந்துமண் டபங்கள். 11. திருக்குள ஜலமே கலங்குமென் றிருப்பார் திரள்ஜனம் மண்டபங் களிலே குருடர் முடவர் குறையுறுப் பினரோ குழுமியே யிருப்பர்ப் பிணியராய் ஒருவனோர் தூதுவன் உழப்புவன் சுனையின் ஜலமதை யாதொரு சமையம் இறங்குவோன் முதலில் எதுவிதப் பிணியோ அகன்றுமே நற்சுகம் பெறுவான் 12. முப்பதாண் டுடனெண் வருடமாய்ப் பிணியன் முடங்கியே கிடப்பதை யறிந்தார். அப்படிக் கிடந்த அவன்பல வருட அகதியென் றறிந்தக முருகி இப்பொழு துனக்குச் சுகமடைந் துயவே விருப்பமு ளதோவென வினவ அப்பனே யெனக்கே யவசிய மதுவே அதற்கென இவணிருக் கிறனே. |