பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

27

நிறைந்துள்ள தன்மையால், (யான்) எவ்வடிவில் (மனம்) பொருந்தி உன்னை அறிந்து (வணங்குவேன்)? அறிந்து உய்யும் வண்ணம் அருள் செய்வாயாக.

    ஆதவன்-சூரியன். மதி-சந்திரன். பார்-பூமி. வெளி-ஆகாயம். எச்சன்-ஆன்மா. களபம்-வாசனை.

    ஆதவன் முதலிய எட்டும் சிவபெருமானுக்குரிய அஷ்டமூர்த்தங்கள் என்பர். இதனை, ‘ நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்-புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்’ என்னும் திருவாசகத் திருவாக்கினும்,

    இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
        இயமாந னாய்எறியும் காற்று மாகி
    அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
        ஆகாச மாய்அட்ட மூர்த்தி யாகிப்
    பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்
        பிறருவும் தம்முருவும் தாமே யாகி
    நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
        நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே

என்ற தேவாரத் திருவாக்கினும் காண்க.

    இந்திரியம் முதலிய தத்துவங்கள் யாவும் கழிய எஞ்சி நிற்பது ஆன்மா ஆதலால் ‘எச்சன்’ எனப்பட்டது ; ‘யஜ்ஞன்’ என்பதன் சிதைவு என்பாருமுளர். சிவபெருமான் உருவாயும் அருவாயும் அருவுருவாயும் நிற்கும் பெற்றிமையை,

    உருமேனி தரித்துக் கொண்ட தென்றலும் உருவி றந்த
    அருமேனி யதுவும் கண்டோம்; அருவுரு வான போது
    திருமேனி உபயம் பெற்றோம். செப்பிய மூன்றும் நந்தம்
    கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே.

எனப் போந்த சிவஞானசித்தித் திருவாக்கான் உணர்க.

(20)