பக்கம் எண் :

58

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

50. உறைவாய்நன் மனத்தன்பர்
        உடல்தோறும் உயிராகி ;
    நிறைவாய்எவ் வுலகனைத்தும்
        நீக்கமிலா துணர்ந்தோர்க்கு ;
    மறைவாய்உய்த் துணரார்க்கு :
        மறைபயிலுங் கருவையில்வாழ்
    இறைவா !நின் திருவிளையாட்(டு)
        யான்வழுத்த அடங்காதே.

    (உன்னை வழிபடும்) நல்ல மனத்தையுடைய அடியாரது சரீரந்தோறும் அவர்கள் உயிரே நீயாகித் தங்கி அருள்வாய்; உன்னை உணர்ந்த சிவஞானிகளுக்கு எல்லாவுலக முற்றும் எள்ளுக்குள் எண்ணெய்போல் நீங்காது நிறைந்தருளுவாய்; உன்னை ஆராய்ந்தறியாதவர்க்கு மறைந்தருளுவாய்: நான்குவேதங்களும் வழங்கும் திருக்கருவையில் எழுந்தருளிய இறைவனே! இவ்வாறுள்ள உனது திருவிளையாடலை, யான் எடுத்துத் துதிக்க, என் துதியில் (அஃது) அடங்காது.

    சிவபெருமான் எங்கும் எப்பொருளினும் பாலில்நெய்போலப் பரந்து மறைந்துளனாயினும், தன்னை உணர்ந்து வழிபடும் அன்பருள்ளத்தே உயிர்க்குயிராகி உறைவான் என்பதை ‘கறந்தபால் கன்னலொடு நெய் கலந்தாற்போலச்-சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று-பிறந்த பிறப்பறுக்குமெங்கள் பெருமான்’ என வரும் திருவாதவூரடிகள் திருவாக்கினும் காண்க. ‘உய்த்துணரார்க்கு மறைவாய்’ என்றார் புறத்தார்க்குச் சேயோனாதலின்.

(50)