பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

57

49. பொருள்வேட்டும் நிலம்வேட்டும்
        பூவையர்தம் புணர்கலவி
மருள்வேட்டும் நாடோறும்
        மனவலிகெட் டயர்கின்றேன் ;
அருள்வேட்டுன் சன்னிதிப்பட்
டருந்துயர்போய் உய்வேனோ ?
தெருள்வேட்டார்க் கருள்புரியுந்
        திருக்களவில் உறைவோனே.

(சிவ) ஞானத்தினை விரும்புவோர்க்குத் திருவருள் செய்யும் திருக்களா நிழலில் எழுந்தருளிய இறைவனே ! எந்நாளும், பொன்னை விரும்பியும் பூமியை விரும்பியும், நாகணவாய்ப் பட்சிபோலுஞ் சொற்களையுடைய பெண்களோடு புணரும் புணர்ச்சியின் மயக்கத்தை விரும்பியும், மனவலியிழந்து சோர்கின்றேன் ; உனது திருவருளை  விரும்பி உன் சந்நிதியை யடைந்து நீங்குதற்கரிய பிறவித் துன்பத்தினின்று நீங்கி  நான் பிழைப்பேனோ?

    வேட்டு-விரும்பி (வேள், பகுதி).   பூவை-நாகணவாய்ப்புள்; கிளியுமாம். மருள்-மயக்கம். தெருள்-ஞானம்.

    அன்னையும் அழுதமகவுக்கே அமுதூட்டுவள் ஆதலின், நின் திருவடிஞானத்தை விரும்பினார்க்கே நீ அதனை அருள்வை ; யானோ பொருளையும் நிலத்தையும் பூவை யரையுமே காதலித்து, இக் காதலால் வருவது துன்பமேயாதலால் துன்பமுற்று மன வலிமைகெட்டுச் சோர்கின்றேனே யன்றி நின் திருவடிஞானத்தைக் காதலித்திலேன். எனக்கு நின் அருள்கிட்டுமா றெங்ஙனம்? கிட்டாவழி யான் துயரகன்று உய்தல் கூடுமோ, கூடாதே என்று இரங்குவார் ‘உய்வேனோ’ என்றார். யான் தோன்றா எழுவாய். அயர்கின்றேன் என்பதை எழுவாயாக்கி அயர்கின்ற நான் எனலும் ஒன்று.

(49)