பக்கம் எண் :

82

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

தலமும் அறிதற்கரியவனும், வாசமமைந்த வண்டுகள் மொய்த்த மலர்களையுடைய திருக்களா நிழலில் எழுந்தருளினவனுமாகிய இறைவன் எனது நெஞ்சந் திருக்கோயிலாகக் குடியிருக்கக்கடவன்.

    படி-பூமி. பதுமம்-தாமரை.  மேயவன்-பொருந்தியவன்.  கடி-வாசனை.

    உயிர்களின் உள்ளத்தில் இறைவன் இடையறாது உறைவானாயினும்      அப்பெற்றி உணர்ந்து அவனை வழிபடுவார்க்கன்றி அவனருள் வெளிப்பட்டுத் தோன்றாதாகலின் ‘குடியிருக்க என் நெஞ்சு கோயிலே’ என்றார். ‘சிறைவான் புனற்றில்லை யுள்ளுமென் சிந்தையுள்ளும் உறைவான்’ என்றார் திருவாதவூரடி களும். மா என்னும் பல பொருள் ஒரு சொல் மலரென்னுஞ் சார்பால் வண்டின்மேல் நின்றது.

(72)

73. கோயில் சூழவுங் குடங்கை கொட்டவும்
        வாயிற் பாடவும் வணங்கி யாடவும்
    ஆயி ரம்பெயர்க் கருவை யாதிபன்
        நேய முற்றுவாழ் தொண்டர் நேர்வரே.

    ஆயிரந் திருநாமங்களையுடைய, திருக்கருவையிலெழுந்தருளிய இறைவனது திருவடிக்கீழ் நேயமிகுந்து வாழும் அடியார், அவனது திருக்கோயிலைப் பிரதக்ஷிணஞ் செய்யவும், உள்ளங்கை கொட்டவும், திருவாயிலினின்று பாடவும், அவனை வணங்கியாடவும் உடம்படுவார்.

குடங்கை-உள்ளங்கை.  நேர்வர்-ஒப்புவர்.

    குடங்கை கொட்டல் முதலாயின பத்திப் பெருக்கால் நிகழ்வன.  கை முதலிய அவயவங்களாலும் மெய்யாலும் ஆய பயன் இறைவனை வணங்குதலே என்று கொண்டவர் தொண்டராதலின் ‘தொண்டர் நேர்வர்’ என்றார். இதனை அப்பர்சுவாமிகள் அருளிச் செய்த திருவங்கமாலையிலும் காண்க.

(73)