கொண்டுள்ள பத்மகிரிநாதர்மீது தென்றல்விடு தூது என்ற நூலும், கன்னிவாடிச் சிற்றரசர் நரசிங்கநாயகர்மீது வளமடல் என்ற நூலும் இவர் பாடியிருப்பனவாகத் தெரிகின்றன. பண்டைக்காலத்துப் புலவர் பரிசில் பெறும் வழக்கம் உண்மையால் ஒருவர் பெறுவதை மற்றொருவர் கண்டு அழுக்காறு கொள்வது இயல்பு. வேசையர் பொருள் மேல் ஆசையர் ஆதலால், அவர்களும் அழுக்காறு கொள்வர். நாய்களும் ஒன்று மற்றொன்றைக் கண்டால் அழுக்காறு கொண்டு குரைப்பது இயல்பு. அழுக்காறு என்ற பண்புடைய குலம் மேற்குறித்த மூன்றாகும். புலவர் மற்றொரு புலவரைப் போற்றுவதும், பரத்தையர் பிற பரத்தையரைப் புகழ்வதும், நாய் பிற நாயைக் கண்டு வாலையாட்டி மகிழ்வதும் அருமையாக நிகழுஞ் செயல்கள். இங்ஙனம் உலகியற்கையிருப்ப, ஆசிரியர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் களந்தைப் படிக்காசுத் தம்பிரான் தமிழ்ப்பாடல்களை வியந்து மனமகிழ்ந்து பாராட்டிய பண்பு யாவரும் வியக்கற் பாலதே. அப்பாடலை அடியிற் காண்க. "மட்டாருந் தென்களந்தைப் படிக்காச னுரைத்ததமிழ் வரைந்த வேட்டைப் பட்டாலே சூழ்ந்தாலு மூவுலகும் பரிமளிக்கும் பரிந்தவ் வேட்டைத் தொட்டாலுங் கைம்மணக்குஞ் சொன்னாலும் வாய்மணக்குந் துய்ய சேற்றில் நட்டாலுந் தமிழ்ப்பயிராய் விளைந்திடுமே பாட்டினுறு நளினந் தானே." | இஃது ஒருவர் வேண்டுகோட்கிணங்கியோ, அன்றிக் கைம்மாறு கருதியோ பாடியதன்று. தம் மனத்தெழுந்த வேட்கையாற் புகழ்ந்ததாதலின், இப்புலவர் தூய உள்ளம் உடையவர் என்பது சொல்லாமலே விளங்கும். இவர், சைவமதப் பற்றுடையவர் என்பதற்கு இவர் பெயரும் பாடிய செய்யுட்களும் சான்றாகத் தோன்றுகின்றன. |