பக்கம் எண் :

விளக்க உரை59


நூல்

கிளியை விளித்தல்

கண்ணிகள் 1,2 : கார்கொண்ட ...... செப்பக்கேள்

   (சொற் பொருள்) கருமைநிறம் பொருந்திய வடிவமுடைய (திருமால் என்ற)
தெய்வத்தின் பெயர் ஆகிய அரி என்ற பெயரைக்கொண்டு அத்திருமால் நீரிற்
படுத்துறங்குவதற்கு விரித்த படுக்கையாகிய ஆலிலையின் பசுமை நிறத்தையுங் கொண்டு
சிறப்புப்பொருந்திய ஐந்து அம்புகளை அடைத்து வைத்திருக்கும் மன்மதனையும்
மேற்கொண்டு (யாவர்க்கும்) இன்பத்தைக் கொடுக்கும் கிளியரசே ! நான் சொல்வதைக்
கேட்பாயாக.

   (விளிக்கம்) "கார்கொண்ட" என்ற முதற்சீரின் மங்கலம், சொல், எழுத்து, தானம்,
பால், உண்டி, வருணம், நாள், கதி, கணம் என்ற பத்துப் பொருத்தமும்
அமைந்திருப்பது காண்க. பண்டைக்காலப் புலவர்கள் சிற்றிலக்கியங்களிற் கூடப்
பொருத்தங்களை யமைத்தே பாடினர் எனத் தோன்றுகிறது. தெய்வங்கள் மீது பாடும்
நூல்களுக்குப் பத்தும் வேண்டுவதின்று. மங்கலம் சொல் எழுத்து மூன்றுமட்டு்மே
மற்றைப்புலவர் அமைத்திருக்கின்றனர். மானுடர்மீது பாடிய நூல்களில் எல்லாம்
அமைத்துப் பாடும் மரபு காண்கின்றோம். கார்கொண்ட என்பதற்கு மேகம் போன்ற
எனவும் பொருள் கூறலாம். திருமால் பெயர்களில் அரி என்பதும் ஒன்று, கிளிக்கும்
அரி என்பது பெயர் ஆதலாற் "கடவுள் பெயர் கொண்டு" என்றார். பாம்பும்
திருமாலுக்குப் பாயல் ஆயினும் "நிறங்கொண்டு" என்ற குறிப்பினால் ஆலிலை எனப்
பொருள் தந்தது பாயல். முல்லை, அசோகு, நீலம், தாமரை, மா என்ற மலர்கள் ஐந்தும்
காமனுக்கு அம்புகள் ஆதலால் "ஐயம்பு அடைக்கும் மதனையும்" என்றார்.
மன்மதனுக்குக் கிளி குதிரையென நூல்களிற் கூறப்படுவதால் அவனை நீ சுமந்து
வருகின்றாய் என்ற பொருள் தோன்ற "மதனையும் மேற்கொண்டு" என்றார். "ஆலைக்
கரும்புசிலை யைங்கணை பூ நாண்சுரும்பு, மாலைக் கிளி புரவி மாருதம்தேர்.- வேலை,
கடிமுரசம் கங்குல் களிறுகுயில் காளம், கொடிமகரம் திங்கள் குடை" என்ற
வெண்பாவால் மன்மதனுக்குரிய அரசுப் பொருள்களை யறியலாம்.