அழகர். இருமை+சோலை - பெரிய சோலையையுடைய மலை. இம்மலை பழைமையும் பெருமையும் உள்ளது என்பதற்குப் பல சான்றுள்ளன. எட்டுத் தொகையாகிய பரிபாடலிற் பதினைந்தாம் பாடலில் இம்மலைச் சிறப்புக் கூறப்பட்டுள்ளது. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகிய சிலப்பதிகாரத்திலும் இம்மலைச் சிறப்புக் கூறப்பட்டுள்ளது. பத்துப்பாட்டுள் ஒன்றாகிய திருமுருகாற்றுப் படையில் இம்மலையின் பெயர் வந்துள்ளது. பிற்காலத்துப் பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் இவர்களும் இத் தலத்தைக் குறித்துப்பாடியுள்ளார். அழகர் அந்தாதி, அழகர் கலம்பகம், அழகர் பிள்ளைத் தமிழ், அழகர் குறவஞ்சி யென்பன இத்தலத்தைக் குறித்த சிற்றிலக்கிய நூல்களாம். பரிபாடல் இம்மலையைப் பற்றிக் கூறும் பகுதி அடியில் வருவது : "அறிவெல்லையால் அறியப்படாத புகழொடு விளங்கிப் பூமியின் எல்லை யேந்திய நிலைமையைவிட்டுப் பெயராத என்றும் அழியாத பழைமையான இசைபொருந்திய புலவரால் ஆராய்ந்துரைக்கப்பட்ட சக்கரவாள முதலிய அழகிய மலைகள் பலவே. அவற்றுள், இந்நிலத்துள்ள மக்கட்குப் பசியையும் வெம்மையையும் நீக்கிப் பலவகையான நிறைந்த பயனெல்லாம் அவர்கள் நுகர்ந்து இன்பம் அடையும்படி பயன்படு மலைகள் சிலவே; அவற்றினுள் பலவகை மலர் பூத்த சுனைகளையுடையவாயும், மேகம் படிந்த உச்சியையுடையவாயும் சிறந்து தெய்வங்கள் தாமாகவே விரும்பியுறையும் நன்மலைகள் சிலவே. அம்மலைகள் சிலவற்றுள்ளும் சிறந்தது கல்லென்று ஒலிக்கின்ற கடலும் கானலும் போலவும், ஒன்றாகச் சேர்ந்திருக்கும் சொல்லும் பொருளும் போலவும் உருவத்தால் எல்லாம் வேறுபட்டுத் தொழிலால் ஒன்றுபட்டு நிற்கும் மாயவனையும் அவன் முன்னோனாகிய பலதேவனையும் தாங்கியோங்கி |