பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

84

கழ

        கழித்தஉடல் பொறைச்சிறையைக்
            கெடுத்து உயிர்புக்கு எடுத்தே,
        அளித்து,அமரில் திளைத்தகளத்து
            அழைத்துஎமனுக்கு அளித்தே,  
                

(564)

    நரசிங்கம் உயிரை உடல் என்னும் சிறையினின்று வெளியே எடுத்தது. இவ்வாறே ‘மனச் சிறையில் கரந்த காதல் உள் இருக்கும் எனக்கருதி உடல் புகுந்து தடவியதோ’ ( கம்பன் )

        உதித்தெழு செக் கர்ஒக்கஉரத்து
            இரத்தம் முகத்து எழவே
        கொதித் தெதிர்கொப் புளித்ததனைக்
            குடித்துஅலையக் குளித்தே,
               

(565)

    ‘அலையக் குளித்து’: குடைந்து நீராடி

        திளைத்தெழுபச் சிரத்தம்மிகத்
            தெரித்த நெறித் தடத்தே,
        முளைத்திடையில் திளைத்தவரைப்
            பிடித்து முறித்துஅடுத்தே, 
                   

(566)

        தொடுத்துஇருமுப் புரிக்குடரைத்
            துலக்கிஎழப் பறித்தே,
        எடுத்துஇருபொற் புயத்துளவத்
            தொடைக்கிடையுள் துவைத்தே,
                 

(567)

    ‘முந்நூல் செந்நூல் கொண்டவண்ணம் ஒப்ப, மாயாத வரத்தனைக் குடர் கோத்தது உன் வாள் நகமே’ ( திருவரங்கத்துமாலை )

        ‘வெடித்தனஇப் படித் தலம்,வெற்பு
            அனைத்தும்’எனப் புனல்கார்
        இடித்தெனப், பிடித்து உடலத்து
            எலுப்புஅலகைப் பறித்தே,
                    

(568)

        கொழுத்தவுடல் தசைத்தடியைக்
            குறைத்து உயரக் குவித்தே,
        பழித்தகனச் சிறைக்குழிகண்
            பசிக் கழுகுக்கு அளித்தே, 
                     

(569)

    ‘கன சிறை குழி கண் பசி கழுகு’: பெரிய சிறகு, குழிந்த கண் உள்ளது, பசி உள்ளது கழுகு.