பக்கம் எண் :

148கலிங்கத்துப்பரணி

இதுவும் அது

369.கோதா வரிநதி மேலா றொடுகுளிர்
      பம்பா நதியொடு சந்தப்பேர்
ஓதா வருநதி ஒருகோ தமையுடன்
     ஒலிநீர் மலிதுறை பிறகாக.

     (பொ-நி.) கோதாவரியொடு, பம்பா நதியொடு சந்தப்பேர் ஓதாவரு நதி
கோதமையுடன், நீர்மலி துறை பிறகாக; (எ-று.)

     (வி-ம்.) காயத்திரி  சந்தங்களில்  ஒன்று.  சந்தப்பேர்  ஓதாவரு நதி-
காயத்திரி நதி. கோதமை - கௌதமியாறு. மலிதுறை - நீர் மிக்க துறையாகிய
இடம். பிறகாக-பின்னாகும்படி.                                 (58)

கலிங்கம்புகுந்து செய்த செயல்

370.கடையிற் புடைபெயர் கடலொத் தமரர்
      கலங்கும் பரிசுக லிங்கம்புக்
கடையப் படரெரி கொளுவிப் பதிகளை
     அழியச் சூறைகொள் பொழுதத்தே.

     (பொ-நி.)  கடல்  ஒத்து,  கலங்கும்  பரிசு,  புக்கு,  எரி   கொளுவி,
சூறைகொள் பொழுதத்து; (எ-று.)

     (வி-ம்.) கடை  - ஊழிக்காலம். புடைபெயர் - நிலைதடுமாறி.  அமரர்-
தேவர்கள். பரிசு-தன்மை. எரி-தீ. பதி-ஊர். சூறைகொள்-கொள்ளையடிக்கின்ற
பொழுதத்து; அத்து; சாரியை.                                (59)

கலிங்கர் நிலை

371.கங்கா நதியொரு புறமா கப்படை
      கடல்போல் வந்தது கடல்வந்தால்
எங்கே புகலிடம் எங்கே யினியரண்
     யாரே அதிபதி யிங்கென்றே.

     (பொ-நி.)  படைகடல்போல்   வந்தது;   கடல்   வந்தால்   இங்கே
புகலிடமெங்கே, அரண் எங்கே அதிபதி யார் என்று; (எ-று.)