பக்கம் எண் :

மூலமும் உரையும்13

1. சுயம்வர காண்டம்

நூல்
தோற்றுவாய்
தருமராசன் வனத்தில் வாழ்தல்

8. பாண்டவரின் முன்தோன்றல் பார்முழுதும் தோற்றொருநாள்
ஆண்டகையே தூதுவனாய்ச் சென்றவனி - வேண்ட
மறுத்தான் இருந்தானை மண்ணொடும்போய் மாளப்
பொறுத்தான் இருந்தான் புலர்ந்து.

(இ - ள்.) பாண்டவரின் முன்தோன்றல்-பாண்டு மன்னன் மக்கள் ஐவரில் மூத்தவனான தருமன், பார்முழுதும் தோற்று - (சூதாடித் துரியோதனனுக்கு) தன் நாடு யாவற்றையும் இழந்ததனால், ஆண்தகையே தூதுவனாய் சென்று அவனி வேண்ட - ஆண்களிற் சிறந்தவனாகிய (கண்ணபிரானே) தூதனாகத் (துரியோதனன் முன்னிலையில்) போய் நாட்டைத் தருமாறு அவனைக் கேட்க, மறுத்தான் இரும் தானையொடும் மண்ணொடும் போய் மாள - அதனைக் கொடுக்க மறுத்தவனான துரியோதனன் மிக்க படைவீரர்களோடும் நாட்டினோடும் தன் உரிமையற்று மாண்டொழியும்படி, பொறுத்தான் ஒருநாள் புலர்ந்து இருந்தான் - பொறமையுடன் இருந்தவனான தருமன், ஒரு நாள் வனத்தில் துன்பத்தால் வாடி இருந்து வந்தான்.

(க - து.) தருமராசன் வருத்தத்துடன் வனத்தில் வாழ்ந்து வருவானானான்.

(வி - ரை.) பாண்டவர் - பாண்டுவின் மக்கள். முன்தோன்றல் - முன்னே பிறந்தவன்; தமையன். மறுத்தான், பொறுத்தான் என்பன, இறந்தகால வினையாலணையும் பெயர்கள். மாள - இறக்க. காரணப் பொருட்டாய் வந்த எதிர்காலச் செயவெனெச்சம். (1)

மன்னர் பலர் வனத்தில் தருமனைக் காணல்

9. நாட்டின்கண் வாழ்வைத் துறந்துபோய் நான்மறையோர்
ஈட்டங்கள் சூழ இருந்தானைக் - காட்டில்
பெருந்தகையைக் கண்டார்கள் பேரெழில்தோள் வேந்தர்
வருந்தகையர் எல்லாரும் வந்து.