பக்கம் எண் :

14நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

(இ - ள்.) நாட்டின்கண் வாழ்வை துறந்துபோய் - தன் நாட்டில் இன்பத்தோடு வாழ்ந்து வந்து சிறந்த வாழ்க்கையை விட்டுவிட்டுப்போய், நால்மறையோர் ஈட்டங்கள் சூழ காட்டில் இருந்தானை - நால்வகை வேதத்தின் விழுமிய பொருளைக் கற்றுணர்ந்த முனிவர் கூட்டங்கள் சூழ்ந்திருக்க வனத்திலுறைந்தவனான, பெரும் தகையை-பெரிய சிறப்பு வாய்ந்த தரும ராசனை, பேர் எழில் தோள் வேந்தர் வரும் தகையர் எல்லாரும் - பேரழகு வாய்ந்த தோள்களையுடைய அரசர்களுள் வருதற்கு ஏற்ற தகுதியுடையார் எல்லோரும், வந்து கண்டார்கள் - அங்கு வந்து கண்டார்கள்.

(க - து.) வருவதற்கிசைந்த மன்னர்கள் யாவரும் காட்டில் தருமனை வந்து பார்த்தார்கள்.

(வி - ரை.) ஈட்டம் - கூட்டம். இருந்தானை - இருந்தவனான தருமனை. இது இறந்தகால வினையாலணையும் பெயர். ஐ - தலைவன் எனப் பொருள் கொள்ளலுமாம். ‘வரும் தகையர் வேந்தர் எல்லோரும் வந்து பெருந்தகையைக் காட்டிற் கண்டார்கள்’ எனக் கூட்டி வினைமுடிபு செய்க. பெருந்தகை : பெரிதாகிய தகுதியுடையவன் எனப் பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. (2)

காட்டில் தருமராசனை வேதவியாசர் வந்து காணல்

10. கொற்றவேல் தானைக் குருநாடன் பாலணைந்தான்
எற்றுநீர் ஞாலத் திருள்நீங்க - முற்றும்
வழிமுறையே வந்த மறையெல்லாம் தந்தான்
மொழிமுறையே கோத்த முனி.

(இ - ள்.) எற்றுநீர் ஞாலத்து இருள் நீங்க - மோதுகின்ற அலைகளையுடைய கடல்சூழ்ந்த இவ்வுலகின் (அறியாமையாகிய) இருள் நீங்கும் பொருட்டாக, வழிமுறை முற்றும் வந்த - ஆசிரியர் மாணாக்கரின் வழிவழியாகக் கேள்விமுறை கற்றல் முறையாக முழுதும் வந்து, மறை எல்லாம் தந்தான் - நால்வகை மறைகளையும் தன் மாணவர்க்குக் கற்பித்தவனும் மொழிமுறையே கோத்த முனி - அம் மறைப்பொருளைப் புராணமுறையில் ஒழுங்குபடுத்தியவனுமான வேதவியாச முனிவன், கொற்றவேல் தானை குரு நாடன் பால் அணைந்தான் - வெற்றிவேலேந்திய படைகளையுடைய குருநாட்டுக் குரியவனான தருமராசனிடத்திற்கு வந்தான்.