கண்கெட்டு வஞ்சச் சூதாடி, மண் இழந்து
போந்து வனம் நண்ணி -தம் நாட்டினைத்
தொலைத்துப்போய்க் காட்டினையடைந்து, என்போல்
இடர் உழந்தார் - என்னைப்போல் துன்பப்பட்டவர்,
மேதினியில் காவலர் வேறு உண்டோ - உலகத்தில்
என்னையன்றி வேறு அரசர் யாரேனும் உண்டோ ?
(க - து.) ‘என்னைப்போல்
அறிவிழந்து சூதாடி நாட்டை யிழந்து காட்டை யடைந்த
அரசர் வேறு யாரேனும் உண்டா ?’ என்று தருமராசன்
வியாசரைக் கேட்டான்.
(வி - ரை.) கண் - கண்போன்று நல்லன
தீயனவற்றை விளக்கி நலம்தருதலால் உவமவாகு
பெயராய் அறிவைக் குறித்தது. ‘மாயக் கவறு’
என்றதனால் ‘அறிவை மயக்கும் சூது’ என்பது
தெளிவாயிற்று. இழந்து, ஆடி, போந்து, நண்ணி முதலியன
இறந்தகால வினையெச்ச அடுக்குகள் ஒன்றன்பின்
ஒன்றாக வந்தன. அவை உழந்தார் என்னும் பெயர்
வினைகொண்டு முடிந்தன. உண்டோ என்பதில் ஓகாரம்
வினாப்பொருளில் வந்தது. (10)
வியாசர், தருமனுக்கு நளமன்னன்
வரலாறுரைத்தல்
18. சேமவேல் மன்னனுக்கச் செப்புவான்
செந்தனிக்கோல்
நாமவேல் காளை நளனென்பான் - யாமத்
தொலியாழி வையம் ஒருங்கிழப்பப் பண்டு
கலியான் விளைந்த கதை.
(இ - ள்.) தனி செங்கோல் நாமவேல்
காளை நளன் என்பான் - தனக்கு ஒப்பற்ற
செங்கோலையும் அச்சந்தரும் வேற் படையையும்
கொண்ட ஏறுபோன்றவனாகிய நளவேந்த னானவன்,
யாமத்து - நள்ளிரவிலும், ஒலி ஆழிவையம் -
ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இம் மண்ணுலகமெல்லாம்,
ஒருங்கு இழப்ப - ஒருமிக்க இழக்குமாறு, பண்டு கலியால்
விளைந்த கதை - முன் காலத்தில் சனிபகவானால்
நிகழ்ந்த வரலாற்றை, சேமவேல் மன்னனுக்கு
செப்புவான் - குடிமக்களுக்கு நலஞ் செய்கின்ற
வேலேந்திய மன்னனாகிய தருமனுக்கு (வேதவியாச
முனிவர்) கூறத் தொடங்கினார்.
(க - து.) வியாசர் தருமராசனுக்கு
நளமன்னன் வரலாறு கூறத்தொடங்கினார்.
|