பக்கம் எண் :

214நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

செந்நெற் கரிர்க்கொத்துக்களை வளைத்து அமிழ்த்துகின்ற நிடத நாட்டு மன்னனாகிய நளன்; தவள தனிக்குடையின் வெண் நிழலும் - வெண்கொற்றக்குடையின் ஒப்பற்ற வெள்ளொளி பரந்த நிழலும், தையல் குவளை கருநிழலும் கொள்ள - தமயந்தியின் கண்களாகிய குவளைமலர்களின் கரிய நிழலொளியும் தன்னைச்சூழ, சென்று செழுந் தேரில் ஏறினான் - போய் அழகான தேர்மேலேறினான்.

(க - து.) நளமன்னனானவன், வெண்கொற்றக்குடையின் வெண்ணிலவும் தமயந்தி கண்களின் கரிய ஒளி நிழலும் தன்னைச் சூழப்போய் அழகிய தேரில் ஏறினான் என்பதாம்.

(வி - ரை.) தவளம் - வெண்ணிறம். நளமன்னன் தன் செங்கோல்முறையினால் எட்டுத்திக்கிலும் புகழொளி பரப்பத் தன் ஆட்சிமுறையை மக்கள் யாவரும் விரும்பியேற்கத் தன் குடைநிழற்கீழ் மக்களை வைத்துக் காத்து ஆண்டான் ஆகலான், அக்குடைக்குத் ‘தனிக்குடை’ என்று அடைமொழி கொடுத்துக் கூறினார். அதன் வெள்ளியநிழல் ஒருபால் வெண்ணில வெறிப்ப, தமயந்தியின் கட்பார்வை நளன்மீதே செல்லுதலால், ஒருபால் அக்கண்ணின் கருநிறவொளி கரியநிறங்காட்ட இவ்விரு ஒளிக் கதிர்களும் இருவேறு நிறங்காட்டித் தன்னைக் கவிந்துசூழச் சென்றான் என, நளமன்னனுக்குச் சிறப்புக் கூறியவாறு. குவளை: கண்கட்கு உவமை ஆகுபெயர்.

பவளக்கொடி நெய்தல் நிலமாகிய கடலில் படர்வது, செந்நெல் மருதநிலத்தில் விளைவது. அப்பவளக்கொடி மருதநிலத்துக்குப் படர்ந்து வந்து செந்நெற் கதிர்க்குலைகளைச் சாய்க்கும் நாடு என்றதனால், நெய்தல்நிலத்துக்கும் மருதநிலத்துக்கும் திணை மயக்கங் கூறி நாட்டு வளத்தைச் சிறப்பித்தார். இத்திணை மயக்கக் கருத்தை அமைத்து,

1கானக்கோழி கதிர்குத்த
மனைக்கோழி தினைக்கவர
வரைமந்தி கழிமூழ்க
கழிநாரை வரையிறுப்ப’

என்றார் பிறரும். (3)

1. பொருநராற்றுப்படை: 222-5.