பக்கம் எண் :

மூலமும் உரையும்423

என, அருணந்தி சிவாச்சாரிய அடிகளார் அருளியதும் காண்க. மலர்களில் சிறந்தது, தாமரை மலர். அதனால் அதனைப் ‘பூ வெனப்படுவது பொறிவாழ் பூவே’ என்றார் சிவப்பிரகாச அடிகளாரும். எனவே, எச்சமயத்தோராயினும் அச்சமயத்தவர்க்கு அவன் வந்து அருள் சுரப்பன் என்பது தெளிவாகின்றது. அவன்றன் திருவடிகளைச் செந்தாமரை யென்றார். தாமரையில் வெண்மை செம்மையென இருவகை உண்டு. அவற்றுள், வெண்டாமரை வெண்ணிறமன்றிப் பிற வேறு நிறமின்மையான் செந்தாமரை அதனின் நிறத்தானும், வெண் தாமரை மலரினும் பார்த்தற்கு அழகுடைத்தாக இருத்தலானும் இறைவன் திருவடிகட்கு அஃது உவமையாகக் கொண்டுரைத்தார். தாமரையென்னும் முதற்பொருளின் பெயர், அதன் சினையாகிய மலருக்காய், தாள்களுக்காதலால் இருமடியாகுபெயர். (1)

சிவபெருமான் வணக்கம்

335. போதுவார் நீறணிந்து பொய்யாத ஐந்தெழுத்தை
ஓதுவார் உள்ளம் எனஉரைப்பார் - நீதியார்
பெம்மான் அமரர் பெருமான் ஒருமான்கை
அம்மான்நின் றாடும் அரங்கு.

(இ - ள்.) நீதி ஆர் பெம்மான் அமரர் பெருமான் - நெறிமுறைகள் யாவும் நிறைந்த பெருமையுடையவனும் தேவர்கட்கு முதல்வனும், ஒரு மான்கை அம்மான் - இடக்கையில் மானினையேந்திய அழகினை யுடையவனுமாகிய சிவபெருமான், நின்று ஆடும் அரங்கு - வீற்றிருந்து திருநடம் புரிகின்ற பொன்னம்பலம் போன்றது, போதுவார் நீறு அணிந்து - எந்த நேரத்தும் நீளமாகத் திருநீற்றினை (நெற்றியினும் மார்பினும் தோளினும்) பூசிக் கொண்டு, பொய்யாத ஐந்து எழுத்தை - உண்மையுள்ள திருவைந்தெழுத்தை, ஓதுவார் உள்ளம் என உரைப்பர் - (தவறாமல்) சொல்லுகின்ற அன்பரின் மனம் என்றே (பெரியோர்) கூறுவார்கள். (அந்த அவைக் குரியவனை வணங்குவோம்.)

(க - து.) சிவபெருமான் நின்று ஆடுகின்ற பொன்னம்பலம் போன்றது, நாள்தோறும் திருநீறணிந்து, அவன்றன் திருவைந்தெழுத்தைத் தவறாமல் சொல்லுகின்ற அன்பர்களின் உள்ளமேயென்று பெரியோர்கள் கூறுவார்கள் என்பதாம்.