பக்கம் எண் :

422நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

லும் இறைவனையே ஆகலான், ‘மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்’ என்றார்.

1‘அல்லை ஈதல்லை ஈதென மறைகளும் அன்மைச்
சொல்லி னால்துதித் திளைக்கும்இச் சுந்தரன்’

என்றார் பரஞ்சோதி முனிவர் திருளையாடலில். திருவடிகளை அகக்கண்ணால் அறிவு முறையில் காண முற்பட்டால் பழமறையில் முதலிடமாக நிற்கின்றது. கண்ணன் அவதாரமாகத் திருமைால் இம் மண்ணுலகிற் பிறந்தகாலத்தில் ஆயர்பாடியில் இடையர் குலத்தாரின் பசுநிரைகளை மேய்த்தபோது அங்கே அந்நிரை மேய்ப்பதற்குப் பின் தொடர்ந்தே சென்றானாகலான், அவைகளின் பின்னணியில் அவன் திருவடி தொடர்ந்துபோய் நின்றது. அவ்வடிகளை அப்பசுக் கூட்டங்களின் பின்புறத்தே காண்டல் கூடுமென்பாராய் ‘காலிக்குப் பின்னேயும் காணலாம்’ என்றார். காலி - பசுநிரை. ‘கன்று காலிகள்’ என்பது உலக வழக்கு. மால் - பெருமை. யானை - கசேந்திரன் என்னும் பெயரையுடைய யானை. ஒருகால் நீர் அருந்த இவ்வியானை நீருள்ள ஏரி ஒன்றில் இறங்கியபோது ஒரு முதலை அதன் காலைப் பிடித்திழுத்துக்கொண்டு நீருள் செல்ல, அப்போது அதினின்றும் தப்பிப் பிழைத்தற்கு வழி தோன்றாமல் திகைத்துப் பின்னர் ஓருணர்வு தோன்ற, மூலப் பொருளாக உள்ளவன் ஒருவன் உளனன்றோ ! அவனே, உலகை, உலகுயிர்களைக் காப்பவன், அவன் ‘உலகம் யாவையும் தாம்உள ஆக்கலும், நிலை பெறுத்தலும் நீக்கலும் ஆகிய அலகிலா விளையாட்டுடையவன்’ என்பதை உணர்ந்து ‘ஆதி மூலமே’ என அலறி அவனை வழுத்த, அவன் இரக்கங் கொண்டு ஓடிவந்து முதலையைத் துமித்து யானையைக் காத்தருளினான் என்பது, புராணங்கள் கூறும் வரலாறு. அதை உட்கொண்டே ஈண்டு ‘முந்தருளும் வேத முதலே......செந்தாமரை’ என்று குறிப்பிட்டார். இதனால் இறைவனை அன்போடு நினைப்பவர்க்கு அவர் நினைந்த வடிவோடு இறைவன் வந்து அருள் சுரந்தருளுவன் என்பதும், அவர் எண்ணிய எண்ணியாங்கு முற்றுவிப்பன் என்பதும் அறியக் கிடக்கின்றது. ‘மலர்மிசை ஏகினான்’ என்னும் திருக்குறள் அடிக்குப் பரிமேலழகர், 2‘அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின்’ என்று பொருளுரைத்ததும், சிவஞானசித்தியாரில்,

3‘யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வம் ஆகிஆங்கே

மாதொரு பாகனார்தாம் வருவர்’

1. திருவிளையாடல் : 31. 2. திருக்குறள் : 3. உரை.
3. சிவஞானசித்தியார் சுபக்கம் : 25.